பூநகரியை மீட்பதற்கான இறுதித் தடையையும் இராணுவத்தினர் தாண்டினர்: பாதுகாப்பு அமைச்சு

இறுதித் தடையையும் தாண்டி பூநகரியை மீட்கும் நிலைக்கு இலங்கை இராணுவத்தினர் சென்றிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 
 
வன்னி முன்னரங்கப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதுடன், பூநகரியை மீட்பதற்கான இறுதித் தடையையும் தாண்டி இராணுவத்தினர் சென்றிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை செம்பன்காடு முதல் நீவில் வரையான 18 கிலோ மீற்றர் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியதாகவும், எனினும், பதில் தாக்குதல்களால் மிகவும் மெதுவாகவே இராணுவத்தினரின் முன்நகர்வு மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

583வது படைப்பிரிவினர் செம்பன்காடு பகுதியில் நேற்று மாலை 6.10 மணியளவில் விடுதலைப் புலிகளின் முக்கிய பகுதி மீது தாக்குதல் நடத்தியிருந்ததாகவும், சில இராணுவத்தினர் உயிரிழந்ததுடன், சிலர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இராணுவத்தினரின் முதலாவது விசேட படையணி கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சி பகுதியை முழுமையாக விடுவித்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. சில மணி நேரம் இடம்பெற்ற கடுமையான சமரைத் தொடர்ந்து அந்தப் பகுதியை மீட்டிருப்பதாக பாதுகாப்புத் தரப்பில் கூறப்படுகிறது.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் போர்நிறுத்த அறிவிப்பை நிராகரிப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுடன் அரசாங்கம் எந்தவொரு பொது இணக்கப்பாட்டுக்கோ செல்லப்போவதில்லையென அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply