வடக்கை கட்டியெழுப்ப 5 நாட்களன்றி 7 நாட்களும் கடமைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் : ஜனாதிபதி
வடக்கை அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதற்கு அமைச்சுக்களின் செயலாளர்களது அர்ப்பணிப்பான செயற்பாடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். கடந்த 30 வருட காலமாக எத்தகைய அபிவிருத்தியின் பயன்களையும் அனுபவித்திராத வடக்கு மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு வாரத்தில் ஐந்து நாட்களன்றி ஏழுநாட்களும் கடமைகளை மேற்கொள்வதற்கு அமைச்சின் செயலாளர்கள் அர்ப்பணிப்புடன் முன்வரவேண்டுமெனவும் ஜனாதிபதி அவர்களுக்குப் பணிப்புரையொன்றை விடுத்துள்ளார்.
அமைச்சுக்களின் செயலாளர்களை அலரி மாளிகையில் சந்தித்து விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகக் காணிகளைத் தேர்ந்தெடுக்கும்போது பொருத்தமான காணிகளைத் தேர்ந்தெடுப்பதுடன் குறிப்பாக வடக்கு மக்களின் தேவைகள் எதிர்பார்ப்புகளை கவனத்திற்கொண்டு செயற்படுமாறும் அமைச்சின் செயலாளர்களுக்குச் சுட்டிக் காட்டியுள்ளார்.
இச்சந்திப்பின்போது ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:
கிழக்கு மாகாண அபிவிருத்திச் செயற்பாடுகளின்போது முகங்கொடுக்க நேர்ந்தது போலன்றி அதைவிடப்பாரிய சிக்கல்களை வடக்கு அபிவிருத்தியின் போது சந்திக்க நேரிடும். கடந்த முப்பது வருட காலங்களில் அரசாங்கம் அபிவிருத்தி நடவடிக்கைகளை வடக்கில் மேற்கொள்ளாமைக்கு இதுவும் முக்கிய காரணமாகும். அபிவிருத்தியின் முக்கியத்துவத்தை இனங்கண்டுகொள்வதன் மூலம் மிகவும் சாத்தியமானதான எதிர்காலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். அத்துடன் அமைச்சுக்களுக்கிடையில் மிகுந்த தொடர்புடையதாக இச்செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பொது அரசாங்கக் கட்டடங்களில் அங்கவீனர்களுக்கு உரிய வசதிகளைச் செய்துகொடுப்பது, அரசாங்க விளம்பரங்களை வெளியிடும்போது லேக் ஹவுஸ் நிறுவனப் பத்திரிகைகளில் அதனைப் பிரசுரிப்பதற்கு முன்னுரிமையளிப்பது போன்ற ஆலோசனைகளை வழங்கிய ஜனாதிபதி அரச நிறுவனங்களுக்காகக் கடதாசிகளைக்கொள்வனவு செய்கையில் எம்பிலிப்பிட்டி மற்றும் வாழைச்சேனை கடதாசி ஆலைகளிலிருந்து அதனைப் பெற்றுக்கொள்வதிலும் முன்னுரிமையளிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார். அத்துடன் அரச நிறுவனங்களுக்குக் குத்தகைக்காக கட்டடங்கள் பெறப்படும்போது மூடப்பட்டுக்கிடக்கும் அரச கட்டடங்களைக் குத்தகைக்குப் பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply