பாதுகாப்பு வலயம் பாதுகாப்பானதல்ல: டேவிட் மிலிபான்ட்

இலங்கையின் வடக்கில் மோதல்கள் நடந்துவரும் பகுதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு வலயம் உண்மையில் பாதுகாப்பான இடமில்லையென இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு திரும்பியிருக்கும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் கூறினார். எனினும், பாதுகாப்பு வலயப் பகுதியில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல்களை நடத்துவதில்லையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  உறுதிப்படுத்தியுள்ளார் எனவும், ஆனாலும், பொதுமக்களை வெளியேறவிடாது விடுதலைப் புலிகள் தடுத்துவைத்திருப் பதாகவும் அவர் தெரிவித்தார். எது எவ்வாறு இருந்தாலும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் என்ற வகையில் இலங்கை அரசாங்கம் ஜனநாயக ரீதியில் செயற்பட்டு சர்வதேச மனிதநேயச் சட்டங்களை மதிக்க வேண்டியது கடமையென மிலிபான்ட்  சுட்டிக்காட்டியுள்ளார்.

“எமது விஜயத்தின் மூலம் போர்நிறுத்தமொன்று ஏற்படுத்தப்படாது. இந்தத் தொடர்ச்சியான மோதல்களால் கடந்த வாரங்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்கள் குடிநீர் மற்றும் உணவு இன்றி ஆபத்துக்குள் சென்றிருப்பது பற்றியே நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்” என்றார் அவர். முதற்தடவையாக வெளிநாட்டுத் தூதுவர்கள் குழுவொன்று இடம்பெயர்ந்த மக்களைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருப்பதுடன், அந்தப் பகுதிகளுக்கு ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லையெனவும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் குறிப்பிட்டார்.

அதேநேரம், இலங்கையில் காணப்படும் நிலைமைகள் தொடர்பாக உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் கவலையடைந்திருப்பதால், பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதாக அவர் கூறினார்.

இதேவேளை, விடுதலைப் புலிகளும் பொதுமக்களை தடுத்துவைத்திருக்கக் கூடாது என பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் கோரிக்கை விடுத்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply