விடுதலைப் புலிகள் இம்முறை மாவீரர் தினத்தைக் கொண்டாடமாட்டார்கள்

வடக்கில் அரசாங்கப் படைகள் முன்னேறி வருவதால் பொதுமக்களை இலக்குவைத்து விடுதலைப் புலிகள் தென்பகுதியில் தாக்குதல் நடத்தும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். “தோல்வியடைந்துவரும் விடுதலைப் புலிகள் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை அதிகரிக்கலாம் என்பதால் அரசாங்கம் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளது” என அவர் கூறினார்.

விடுதலைப் புலிகள் தமது பெரும்பாலான பகுதிகளை இழந்திருப்பதால் இம்முறை மாவீரர் தினத்தைக் கொண்டாடமாட்டார்கள் எனக் குறிப்பிட்ட அமைச்சர், “நீண்டகாலமாக பதுங்குழியில் இருக்கும் பிரபாகரன் வெளியில் வந்து மாவீரர் தினத்தை மாத்திரமே கொண்டாடுபவர்” எனத் தெரிவித்தார்.

வன்முறை நடவடிக்கைகளைத் தூண்டிவிட்டு தென் பகுதியின் ஸ்திரமற்றதன்மையை ஏற்படுத்துவதற்கு விடுதலைப் புலிகள் முயற்சிப்பார்கள் என்பதால், பாதுகாப்புத் தரப்பினர் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் கூறினார்.
இதேவேளை, 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதி 55 பொதுமக்கள் மற்றும் விமானிகளுடன் காணாமல்போன லயன் எயார் விமானத்தை விடுதலைப் புலிகளே பூநகரிப் பகுதியில் சுட்டுவீழ்த்தியதாகவும், உயிரிழந்தவர்களின் நினைவாக அங்கு நினைவுத் தூபியொன்றை அமைக்கவிருப்பதாகவும் ரப்புக்வெல குறிப்பிட்டார்.

பூநகரி விரைவில் மீட்கப்பட்டுவிடுமெனவும், அதன் பின்னர் அங்கு நினைவுத்தூபியொன்று அமைக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

அத்துடன், பூநகரி ஊடாக யாழ் குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை இராணுவத்தினர் விரைவில் திறப்பார்கள் எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நம்பிக்கை வெளியிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply