14,000 மத்தியதர வீடுகளை நிர்மாணிப்பதற்கு மலேசியா இணக்கம்

இலங்கையில் 14,000 மத்திய தர வீடுகளை நிர்மாணிப்பதற்கு மலேசியா இணக்கம் தெரிவித்துள்ளது.இலங்கை வந்துள்ள மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக்குக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போதே இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக்குக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த மலேசியப் பிரதமருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு இராணுவ அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. மலேசியாவுக்கும் இலங்கைக்குமிடையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு நாடுகளின் தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர்.

விமான நிலைய முகாமைத்துவம், மத்திய தர வர்க்க வீடமைப்பு, விஞ்ஞான தொழில்நுட்பம்,நெனோ தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் தொழில்நுட்பம், சுற்றுலாத்துறை, மருத்துவம், கல்வி, இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி, புலனாய்வு தகவல்களை பரிமாறிக்கொள்ளுதல், தூதுவர்களுக்கான பயிற்சி, ஈ- நீதிமன்ற தொழில்நுட்பம், விவசாயம் போன்ற துறைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இரு நாடுகளுக்கிடையில் சுதந்திர, வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்தல் மற்றும் முதலீட்டை உறுதிப்படுத்தல், இருநாடுகளுக்கிடையிலான வருடாந்த வர்த்தக பெறுமதி இவ்வருடம் 680 மில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளது.

மலேசியாவின் ஈ- நீதிமன்ற தொழில்நுட்பத்தின் மூலம் வழக்குகளை விசாரிப்பதற்கான கால எல்லையை பெரிதும் குறைக்க முடிந்துள்ளதாகவும் இத் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்கவும் விருப்பம் தெரிவித்தார்.

இலங்கையில் 14,000 மத்திய தர வர்க்க வீடுகளை நிர்மாணிப்பதற்கு மலேசியா இணக்கம் தெரிவித்ததுடன், இது தொடர்பான கலந்துரையாடல் இன்னும் சில தினங்களில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. போதைப்பொருள் மற்றும் ஆட் கடத்தல்களை கட்டுப்படுத்துவதற்கு புலனாய்வுத்துறை தகவல் பரிமாற்றத்தை மேலும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியதுடன், இது தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய பிரதமர் குறிப்பிட்டார்.

விஞ்ஞான தொழில்நுட்பம், புத்தாக்க ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கை விஞ்ஞான தொழில்நுட்ப செயலகத்திற்கும் மலேசிய கைத்தொழில், உயர் தொழில்நுட்பத்திற்கான அரச பேரவைக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கைக்கும் மலேசியாவுக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு மலேசிய பிரதமரின் இந்த விஜயம் இடம்பெறுவதுடன், அதனை நினைவுகூரும் வகையில் விசேட நினைவு முத்திரை ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தபால் சேவைகள் அமைச்சர் அப்துல் ஹலீமினால் நினைவு முத்திரை இரு நாடுகளின் தலைவர்களிடமும் கையளிக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான திலக் மாரப்பன, ஜோன் அமரதுங்க, ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்கிரம, சுசில் பிரேம ஜயந்த, தலதா அத்துகோரள, கயந்த கருணாதிலக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply