அன்று ஜெயலலிதா – இன்று ரஜினி: போயஸ்கார்டனில் இருந்து மீண்டும் அரசியல் புயல்

ஜெயலலிதா இருந்த வரையில் பரபரப்பான அரசியல் களமாகவே காணப்பட்டது. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த ஜெயலலிதா தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்தே பல சாதனைகளை படைத்தார். கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடங்கி அ.தி.மு.க.வின் கொள்கை முடிவுகள் அனைத்தையுமே அவர் அங்கு வைத்துதான் முடிவு செய்தார்.

இதனால் அவர் ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாத நேரத்திலும் சரி போயஸ்கார்டன் பகுதி பரபரப்பு களமாகவே காணப்பட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவின் கீழ் இருந்த ஜெயலலிதா வீட்டு முன்பு எப்போதுமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். இதையெல்லாம் தாண்டி அ.தி.மு.க. தொண்டர்கள் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக வீட்டு அருகில் காத்து கிடப்பார்கள். வீட்டில் இருந்து வெளியே செல்லும்போதும், வீட்டுக்கு வரும்போதும் ஜெயலலிதாவின் கார் மெதுவாக செல்லும். தொண்டர்களை பார்த்து அவர் கையசைத்து விட்டு செல்வார்.

அம்மாவ பார்த்தாச்சிப்பா என்கிற சந்தோ‌ஷத்துடனேயே அ.தி.மு.க. தொண்டர்கள் அங்கிருந்து புறப்பட்டு செல்வார்கள். இப்படி நீண்ட நாட்களாகவே தமிழக அரசியல் களத்தின் தவிர்க்க முடியாத மையமாகவே காட்சி அளித்த போயஸ்கார்டன் பகுதி ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு களை இழந்து காணப்பட்டது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் வீட்டு அருகில் வசித்து வரும் தமிழ் திரைஉலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி, அரசியலில் குதித்துள்ளார். இதனால் போயஸ் கார்டன் பகுதி மீண்டும் பரபரப்பை எட்டியுள்ளது. போயஸ்கார்டனில் இருந்து மீண்டும் ஒரு அரசியல் புயல் வீசத்தொடங்கி இருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் இதனை வர்ணிக்கிறார்கள்.

ஜெயலலிதா உயிரோடு இருந்த கால கட்டத்தில் அவர் போயஸ்கார்டன் இல்லத்தில் இருந்து வெளியில் செல்லும் போதெல்லாம் அங்கே காத்திருக்கும் பத்திரிகையாளர்கள் கேள்வி கணைகளை தொடுப்பார்கள்.

கடந்த சில நாட்களாகவே போயஸ் கார்டன் பகுதியில் மீண்டும் அதே நிலைதான் காணப்படுகிறது. ரஜினியின் ரசிகர்கள் சந்திப்பு நடந்த கடந்த 6 நாட்களும் பத்திரிகையாளர்கள் போயஸ் கார்டன் இல்லத்தில் காத்து கிடந்தனர்.

அரசியல் பிரவேசம் பற்றி பல்வேறு கேள்விகளையும் எழுப்பினர். இதன்மூலம் அன்று ஜெயலலிதாவால் பரபரப்பாக காணப்பட்ட போயஸ் கார்டன் பகுதியில் இன்று ரஜினியால் மீண்டும் பரபரப்பு களமாக மாறிப் போய் உள்ளது.

அரசியல் பிரவேசம் பற்றி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த ரஜினி, கட்சி தொடங்கும் வரையில் அரசியல் பற்றி எதுவும் பேசமாட்டேன் என்றே கூறி இருப்பதுடன் ரசிகர்களும் அதையே கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

அதே நேரத்தில் அரசியல் பிரவசேம் பற்றிய அடுத்தடுத்த நடவடிக்கைகளில் அவர் தொடர்ச்சியாக ஈடுபடுவார். குறிப்பாக கட்சி பெயர், சின்னம் கொடி, கொள்கைகள் பற்றிய அறிவிப்புகளை அவர் படிப்படியாக வெளியிடுவார். அது என்ன? என்கிற எதிர்பார்ப்பு இப்போதே ஏற்படத் தொடங்கி விட்டது. இதன் மூலம் வரும் நாட்களில் அரசியல் களத்தில் ரஜினியால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே கூறலாம்.

தமிழகத்தை பொறுத்த வரையில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 திராவிடர் கட்சிகளும் பலம் வாய்ந்தவையாக உள்ளன. அமைப்பு ரீதியாகவும் இந்த கட்சிகள் பலம் வாய்ந்தவையாகவே உள்ளன. இப்படி அடித்தளம் மிக்க இந்த கட்சிகளை ஜெயித்துக் காட்டுவது என்பது ரஜினிக்கு சவாலாகவே இருக்கும்.

அதே வேளையில் தமிழக மக்கள் இப்போது மாற்றத்துக்காக காத்திருக்கிறார்கள் என்கிற கணிப்பும் உள்ளது. இதனை தனக்கு சாதகமாக்கி போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டுள்ள ரஜினி என்கிற அரசியல் புயல் திராவிடக் கட்சிகளை சாய்க்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply