ஈரான் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் 12 பேர் பலி

ஈரான் அரசுக்கு எதிரான கிளர்ச்சி அந்த நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இதில் இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர்.ஈரானில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதை தொடர்ந்து அந்த நாட்டு மக்கள் கடந்த வியாழக் கிழமை முதல் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் தெஹ்ரான் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் கிளர்ச்சி பரவி வருகிறது.

அதிபர் ரவுஹானி பதவி விலக வேண்டும். சிரியா, பாலஸ்தீனம் உள்ளிட்ட வெளிநாட்டு பிரச்சினைகள் குறித்து கவலைப் படாமல் ஈரான் மக்களின் நலன் குறித்து அரசு அக்கறை கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டோரத் என்ற நகரில் கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் அவர்கள் உயிரிழந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனை அரசு தரப்பு மறுத்துள்ளது. இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நகரங்களில் நடந்த போராட்டங்களில் 10 பேர் பலியாகி இருப்பதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. எனினும் அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்கவில்லை.

உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதால் ஈரான் முழுவதும் வன்முறை, கலவரம் பரவி வருகிறது. பல்வேறு நகரங்களில் அரசு அலுவலகங்கள், வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. அந்த நாட்டு உள்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது சொத்துகளை சேதப்படுத்துவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள் ளார்.

ஈரானின் பல்வேறு நகரங்களில் நேற்றும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. அதிபர் ஹசன் ரவுகானி கூறியபோது, ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் நடத்த மக்களுக்கு உரிமை உள்ளது. அதேநேரம் நாட்டின் நலன் கருதி மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள் ளார்.

சிரியா அதிபர் ஆசாத், ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சிப் படை, பாலஸ்தீன கிளர்ச்சிப் படைகளுக்கு ஈரான் அரசு ஆதரவு அளித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆட்சி, அதிகாரத்தில் மதத் தலைவர்களின் தலையீடும் உள்ளது. இவற்றையெல்லாம் கண்டித்தே மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply