ஜனாதிபதி, பிரதமர் சொல்வது பொய்யா? சுமந்திரன், சம்பந்தன் சொல்வது பொய்யா?:சுரேஷ் பிரேமச்சந்திரன்
ஜனாதிபதியும் பிரதமரும் சொல்வது பொய்யா? சுமந்திரனும் சம்பந்தனும் சொல்வது பொய்யா? ஜனாதிபதியும் பிரதமரும் சிங்கள மக்களுக்கு தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகிறார்கள். ஆனால் எங்களுடைய தலைவர்கள் தமிழ் மக்களை கேலிக்குள்ளாக்கி ஏமாற்றுகின்றனர் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நேற்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வட கிழக்கில் மாத்திரமல்ல தென் பகுதியிலும் முக்கியத்துவம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தென்பகுதியை பொறுத்தவரையில் இத்தேர்தலுக்கு பிற்பாடு மைத்திரி தொடர்ந்து ஆட்சியில் இருப்பதா? மைத்திரியும் மஹிந்தவும் கூட்டுச் சேர்வதா அல்லது மைத்திரி ரணில் கூட்டு தொடர்வதா? போன்ற பல விடயங்களை தீர்மானிக்கக் கூடிய ஒரு தேர்தலாக தென்பகுதியில் பார்க்கப்படுகின்றது.
மைத்திரி மஹிந்தவிற்கு ஏற்பட்ட இடைவெளி காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் அது ஒன்றாவதா அல்லது புதிய கட்சியில் பரிணமிப்பதா போன்ற பல விடயங்ளைத் தீர்மானிக்கக் கூடிய தேர்தலாக உள்ளது.
இதேபோன்றே வடகிழக்கிலும் இதுவரை நாங்கள் தான் ஏக பிரதிநிதிகள் அவர்கள் என்றும் ஏக பிரதிநிதிகளாக இல்லாவிட்டாலும் கூட இந்தத் தேர்தல் அதனை தீர்மானிக்கபோகின்றது.
இந்தத் தேர்தல் இதுவரை காலமும் இருந்ததை விட வட கிழக்கிலும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டு தமிழ் மக்களுடைய ஆணையைப் பெற்று தமிழ் மக்களுடைய உரிமைகளை மீட்டெடுப்போம் என்று போனவர்கள் இதற்காக என்ன விடயங்களைச் செய்தார்கள் மக்களை எவ்வாறு ஏமாற்றுகின்றார்கள் என்பதை தீர்மானிக்கக் கூடிய தேர்தலாக இது இருக்கின்றது. ஆகவே இந்தத் தேர்தல் வடகிழக்கிலும் சரி தென்னிலங்கையிலும் சரி முக்கியமாகவுள்ளது.
அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் எவ்வளவு தூரம் தள்ளப்பட்டிருக்கிறார்கள் மக்களிடம் ஆணை பெற்று சகல உரிமைகளையும் பெற்று தருவோம் எனக்கூறி வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும். இறையாண்மை சுய உரிமை அங்கீகரிக்கப்பட்ட நிலையில் ஒரு சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும். அதற்காக வாக்களியுங்கள் என கேட்டு அதற்காக வாக்கைப் பெற்று இன்று பாராளுமன்றத்தை அரசியல் சபையாக மாற்றி அந்த அரசியல் சாசன சபையில் ஆறு ஏழு உப குழுக்கள் நியமித்து அதனுடன் சேர்த்து ஒரு வழிகாட்டல் குழு பிரதம மந்திரி தலைமையில் உருவாக்கி தமிழ் மக்கள் சார்பில் சுமந்திரன் சம்பந்தன் இருவரும் இருந்தார்கள்.
அந்த வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை தற்போது வெளிவந்துள்ளது. அந்த அறிக்கையில் தமிழ் மக்களுக்குத் தேவையான அத்தனையும் இருப்பதாக அடித்துக் கூறுகின்றார்கள். முதலமைச்சரே இதைப் பற்றி பேசுகின்ற என்போன்றவர்களோ அல்லது பல்கலைக்கழக ஆசிரியர்களோ இதனை சரியான முறையில் படிக்கவில்லை வாசிக்கவில்லை எனக் கூறுகின்றார்கள். அவர் ஒருவர் மாத்திரம் தான் அதனை வாசித்திருக்கின்றார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் இருக்கக்கூடியவர்கள் எல்லோரும் முட்டாள்கள். அவர்களுக்கு அது விளங்கவில்லை. சிவில் சமூகத்தில் இருப்பவர்களுக்கும் விளங்கவில்லை. அரசியல் கட்சியைச் சார்ந்த நாங்கள் எல்லோரும் முட்டாள்கள். எங்களுக்கும் அது விளங்கவில்லை. தனிய சுமந்திரனுக்கு மாத்திரம் விளங்குகின்றது. இந்த இடைக்கால அறிக்கை சமஷ்டி அரசியல் அமைப்பு அது ஏற்றுக்கொண்டிருக்கிறது.
எவ்வளவு தூரம் தமிழ் மக்களை ஏமாற்ற முடியுமோ அந்தளவில் ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற இந்த சூழல் என்பது தமிழ் மக்களை கேவலப்படுத்துவது வட கிழக்கு இணைப்பு வட கிழக்கு இணைப்பு தொடர்பாக இடைக்கால அறிக்கையின் இணைப்பில் வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பாக கூறியுள்ளதாக கூறியுள்ளார்கள். ஆனால் இணைப்புக் கிடையவே கிடையாது என ஜனாதிபதியும் பிரதமரும் தெளிவாகக் கூறுகிறார்கள் 73 தடவைகள் கூடிப் பேசிய வழிகாட்டல் குழுவில் இதைப் பற்றி பேசவே இல்லை என பிரதம மந்திரி தலைமையிலான குழுவினர் எடுத்துக் கூறியுள்ளனர் என்றார்.
இதனை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவில் கூட வட கிழக்கு இணைப்பை ஏன் பேசவில்லை எனக் கேட்டபோது முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள் என்கின்றனர். அவ்வாறாயின் மாற்றுநடவடிக்கைகள் என்ன. அதற்கு அவர்களிடம் பதில் ஏதும் இல்லை.
இவ்வாறான நிலையில் நாங்கள் இரண்டு ஆலோசனைகளை முன்வைத்தோம். வட கிழக்கு இணைப்பு என்பது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் பெறப்பட்டது. 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றீர்கள். இந்தியா சென்று வட கிழக்கு இணைப்பு தொடர்பாக தெளிவு படுத்துவதன் மூலம் இதனைத்தீர்த்துக் கொள்ள முடியும் இந்தியாவின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளமுடியும்.
அது மட்டுமன்றி இந்திய ஊடகங்களும் இதனை வெளிப்படுத்துவதன் மூலம் இதனை இந்தியா உணர முடியும். அவ்வாறு இந்தியா பதில் வழங்குகின்றபோது அது கொழும்பிற்கும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும். இவ்வாறு நாம் கேட்டபோது சம்பந்தன் சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு இந்தியா செல்ல விரும்பவில்லை என்கிறார். அவ்வாறாயின் எவ்வாறு வடகிழக்ககை இணைப்பீர்கள் எனக் கேட்டதற்கு அவர்களிடம் பதில் இல்லை.
மக்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற அடிப்படையில் இவர்கள் கதைகளை கூறி வருகின்றார்கள். இவ்வாறானவர்களுடன் நாங்கள் இணங்கிப் போனால் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகள் கிடைக்குமா? சமஷ்டியைப் பற்றி பேசினால் ஜனாதிபதியும் பிரதமரும் இது ஒற்றையாட்சிதான் அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது என்றுதெரிவித்தார். ஆனால் சம்பந்தனும் சுமந்திரனும் சமஷ்டிதான் என்கிறார்கள்.
அவ்வாறாயின் ஜனாதிபதி பிரதமர் சொல்வது பொய்யா? சுமந்திரனும் சம்பந்தனும் சொல்வது பொய்யா? யார் பொய் செல்கிறார்கள் ஜனாதிபதியும் பிரதமரும் சிங்கள மக்களுக்க தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகிறார்கள். ஆனால் எங்களுடையவர்கள் மக்களை கேலிக்குள்ளாக்கி ஏமாத்துகின்றார்கள். இவ்வாறான சூழலில் இவர்கள் பாராளுமன்றத்தில் எங்களுக்காகவா? ஐக்கிய தேசியக் கட்சிக்கா? அரசாங்கத்திற்காகவா? பேசுவார்கள் யாருடைய நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் யாருக்காக பேசுகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply