கிழக்கில் இயல்புநிலை என்றால் மாணவர் கடத்தப்படுவதேன்:தமிழ் தேசிய கூட்டமைப்பு
கிழக்கு மாகாணம் முற்றாக விடுவிக்கப்பட்டு இயல்புநிலை ஏற்படுத்தப்பட்டு சிவில் நிர்வாகம் நடைமுறையில் இருப்பதாக அரசாங்கம் கூறும் இவ்வேளையில் மட்டக்களப்பு நகர் மற்றும் ஏனைய பிரதேசங்களில் மாணவர்கள் காணாமல் போயுள்ள சம்பவங்களானது பலத்த சந்தேகத்தையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், தங்கேஸ்வரி கதிர்காமன், த.கனகசபை, எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், “கடத்தப்பட்ட மாணவர்களை சம்பந்தப்பட்டவர்கள் மனிதாபிமான ரீதியில் விடுதலை செய்ய வேண்டும் “என்றும் வலியுறுத்திக் கேட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :
“கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவியான சதீஸ்குமார் தினுஷிகா, பாடசாலை சென்றிருந்தவேளை காணாமல் போயுள்ளார். இவர் கடத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இம் மாணவியின் தந்தையும் 2 வருடங்களுக்கு முன்பு இனந்தெரியாத ஆயுதக் குழுவினரால் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ள நிலையிலேயே இம் மாணவியும் கடத்தப்பட்டிருக்கின்றார்.
இவரைத் தவிர ஏறாவூர் விபுலானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வந்த வள்ளுவன் மதி சுதன் என்ற 15 வயது மாணவனும் ஏற்கனவே காணாமல் போயுள்ளார்.
இப்படி மாணவர்கள் மர்மமான முறையில் காணாமல் போயிருப்பதால் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாடசாலைக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பிள்ளைகளை அனுப்புவதற்குப் பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். இப்படியான சம்பவங்களைப் பார்க்கும் போது மாணவர் தொடக்கம் வயோதிபர் வரை சுதந்திரமாக நடமாட முடியாத நிலை தோன்றியிருப்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.
எனவே கிழக்கு மாகாணத்தில் சட்டமும் ஒழுங்கும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறும் அரசாங்கம் இம்மாணவர்கள் காணாமல் போன சம்பவங்களுக்குப் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். இதன் மூலமே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உருவாகியுள்ள அச்சத்தையும் பீதியையும் நீக்க முடியும்.”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கடந்த மார்ச் மாதம் திருகோணமலை புனித மரியாள் கல்லூரி மாணவி ரெஜி ஜூட் வர்ஷாவும் இதே போன்று கடத்தப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply