ஆயுதக் கலாச்சாரத்தின் ஐரோப்பிய வருகை
அநாமதேய அரசில் கொலைகளின் வரலாறு எமது தேசத்தையும் தாண்டி பாரிஸிலும் தனது கோரமாக பதித்துள்ளது. பாரிஸில் சபாலிங்கத்தின் படுகொலையால் மானிடம் மீண்டும் ஒரு முறை தலைகுனிந்தது. மே மாதம் முதலாம் திகதி (1/5/1994) பிற்பகல் 1 மணியளவில் துப்பாக்கி சகிதம் அவரது வீட்டுக்குள் நுழைந்த இரண்டு இனம் தெரியாத தமிழ் இளைஞர்கள் அவரது மனைவி, குழந்தை முன்னால் சபாலிங்கம் மீது துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்த பின் தொலைபேசி மற்றும் சகல தொடர்புகளையும் நாசஞ் செய்து குடும்பத்தினரையும் எச்சரித்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். அவரது மனைவியும் மகனும் இக்கோரக் கொலையை நேரில் கண்டு பேரதிர்ச்சிக்குள்ளானார்கள்.
சபாரட்ணம் சபாலிங்கம் பாரிஸில் வசிக்கும் ஓரு மனித உரிமையாளரும் புத்தக வெளியீட்டாளருமாவார். வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 14.01.1952 இல் பிறந்தார். திருமணமான இவருக்கு ஒரு ஆண் குழந்தை உண்டு. இனிய சுபாவமும்,உதவி செய்யும் உள்ளமும் கொண்ட இந்த மனிதன் விருந்தினர் போல் வந்த இரு தமிழ் இளைஞர்களினால் கோழைத்தனமாக கொலை செய்யப்பட்டது ஏன்?
தமிழ் மக்கள் மேல் திணிக்கப்பட்ட ஒடுக்கு முறைக்கெதிராக எழுந்த மாணவர் பேரவையின் ஸ்தாபகர்களில் ஒருவர் தான் சபாலிங்கம் 1973ம் ஆண்டில் அரசால் கைது செய்யப்பட்டு இரண்டு வருடங்களாக பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டார். சிறீலங்கா அரசின் சித்திரவதை தாங்காமல் நாலாம் மாடியில் இருந்து இவர் குதித்த போதும் உயிர் பிழைத்தார். 1978ம் ஆண்டில் பஸ்தியாம்பிள்ளை கொலை தொடர்பாக குற்றஞ் சாட்டப்பட்ட சபாலிங்கம் மீண்டும் அரசினால் கைது செய்யப்பட்டு விடுதலையானார். திருமணமான பின் 1981ம் ஆண்டு பாரிசுக்கு வந்தார். ஆனாலும் தமிழ் மக்களின் விடுதலையை நேசித்தார். 1985ம் ஆண்டு வரை ரெலோ ஆதரவாளராக இருந்து செயல்பட்டார்.
இயக்கங்களின் ஜனநாயகமற்ற தன்மைகளும் குறுகிய பார்வையும். அரசியல் வறுமையும். ஆயுத மோகமும் சபாலிங்கம் போன்ற மனிதர்களுக்கு வெறுப்பையும், ஏமாற்றத்தையும் ஊட்டின. இதனால் இயக்கசார்பு அரசியல் இருந்து தன்னை முழுமையாக விடுவித்துக்கொண்டார்.
ஆனாலும் இயக்க அராஜக அரசியலுக்கப்பாலும் மானிட விடுதலைக்கான அவசியமும் அதற்கான பணிகளும் இருப்பதாகவே நம்பினார்.
அரசின் அடக்கு முறைக்கும் மட்டுமல்லாமல் இயக்கங்களின் அராஜகத்திற்கும் ஆயுத கலாச்சாரத்திற்கும் தாக்குப்பிடிக்க முடியாத அவல நிலையில் ஈழத்தமிழர்களில் ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக ஜரோப்பா மட்டுமல்ல உலகமெங்கும் சிதறினர். உண்பதற்கு மட்டுமே வாய் திறக்க அனுமதிக்கப்பட்ட சூழ்நிலையிலிருந்து வந்த பல கலைஞர்களுக்கும், அறிஞர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கும் புகலிடம் புதியதொரு களமாக அமைந்தது. போர்ப்பரணியும் புகழ் பாடலும் மட்டுமே இலக்கியமாக திணிக்கப்பட்ட ஒடுக்குமுறை சூழலிருந்து வெளியே வந்தவர்களின் மெய்யான சுதந்திரப் படைப்புகளாக புலம் பெயர்ந்த இலக்கியங்கள் எழுந்தன. மனித நேயம், வாழ்வின் அவலம், வெளிநாட்டு சூழல், ஜனநாயகம் போன்ற பல்வேறு பரிமாணங்களில் கலை கவிதை, இலக்கியங்கள் பிறந்தன. ஜரோப்பிய நிறவெறி- இயந்திர வாழ்க்கை- குலைந்து போன குடும்பங்கள் என்ற அர்த்தமற்ற வாழ்க்கைக்குள் அமிழ்ந்து போன பலருக்கு இந்தப் படைப்புகள் நம்பிக்கையைக் கொடுத்தன.
இந்தப் படைப்புகளின் அவசியம் பற்றி சபாலிங்கம் நன்கு உணர்ந்திருந்தார். இப்படைப்புகள் வெளிவருவதற்கான சகல ஆதரவுகளையும் தன்னால் முடிந்தவரை நல்கினார். ஈழம் கலைகள் சமூக விஞ்ஞானக் கழகத்தை (ASSEAY) நிறுவி அதனூடாக பல ஆக்கங்களை வெளிக்கொண்டு வந்தார். சேரனின் எரிந்து கொண்டிருக்கும் நேரம், சோலைக்கிளியின் ஆணிவேர் அறுந்த நான், அருந்ததியின் இரண்டாவது பிறப்பு, ஜெயபாலன் கவிதைகள் போன்ற கவிதைத் தொகுப்புகளையும், புத்தளம்-வரலாறும் மரபுகளும் என்ற ஷாஜகானின் வரலாற்று நூலையும், சிவராமின் “The Eluding Peace” என்ற அரசியல் ஆய்வு நூலையும் பதிப்பித்து வெளியிட்டார். இலக்கிய சந்திப்புகள் நடத்துவதிலும் ஆர்வம் காட்டினார். மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் -யாழ் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டுவரும் அறிக்கைகளை பிரான்சில் பரவலாக விநியோகிப்பதிலும் முன்னின்றார். தமிழீழ விடுதலைப்போராட்ட நினைவுகள் பற்றி புஸ்பராஜா எழுதும் நூலை பதிப்பிப்பதற்கான முயற்சிகளில் இறுதிக் காலங்களில் ஈடுபட்டிருந்தார் என்பதையும் நாம் அறிகிறோம்.
சபாலிங்கம் தனக்கு சரியென்று பட்டதை வெளிப்படையாக பேசினார். ஜனநாயகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். ஒரு மனிதாபிமானி,ஆயுதக் கலாச்சாரத்தினை அடியோடு வெறுப்பவர். அதுமட்டுமல்ல சுதந்திரமான கருத்துக்கள் வெளியே கொண்டு வரப்படுவதன் அவசியத்தை உணர்ந்து அதற்காக செயல்பட்டவர்.
இந்த நிலைப்பாடுதான் இக்கொலையின் சூத்திரதாரிகளுக்கு இவர் மேல் ஆத்திரத்தை மூட்டியது. தாங்கள் ஆட்சி செய்யும் பகுதிகளில் சகல ஜனநாயகக் கதவுகளையும் மூடி.பேனாக்களுக்கு பூட்டுப்போட்டு ஆயுதப் பலத்தில் ஆட்சியை திணித்து அதை மக்களின் வாழ்க்கை முறையாகவும் மாற்றுவதில் வெற்றிகண்டவர்கள் அதே பாணியை ஜரோப்பாவிலும் நடைமுறைப்படுத்த முயலும் முதற்கட்டமே இது. சுயமான சிந்தனைக்கும் செயற்பாட்டிற்கும் களத்திலிருந்த்து வரும் எச்சரிக்கையே இது.
புதிய கருத்துக்களும் சிந்தனைகளும் தங்களது ஆதிக்கத்திற்கும் அதிகாரத்திற்கும் ஆபத்தைக்கொண்டு வரும் என்ற அச்சத்தில் மூழ்கி அந்த கருத்துக்களை சகித்து கொள்ள முடியாத பேடிகளே இவ்வாறான கோழைத்தனமான கொலைகளைச் செய்கிறார்கள். தனிமனிதனை அழிப்பதன் மூலம் கருத்துக்களை தடைசெய்து விடலாம் என கனவு காண்கிறார்கள். சுந்தரம், மனோமாஸ்டர், விமலேஸ்வரன், ராஜனி போன்ற அரிய மனிதர்கள்- சமுதாயத்தின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு உழைத்தோர்- இவர்களின் கோழைத்தனத்திற்கு பலியானார்கள். இன்று சபாலிங்கம் ஆனாலும் அவர்களின் சிந்தனைகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.
அகதிகளை ஐரோப்பியர்கள் தங்களது நாடுகளில் பிரச்சனை ஏற்படுத்துபவர்கள்- கிறிமினல்கள்-காட்டுமிராண்டிகள் என சித்தரித்து வெளியேற்ற முனைகிறார்கள். இக்காலகட்டத்தில் இவ்வாறான கொலைகள் தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுவதை ஐரோப்பிய அரசுகள் நியாயப்படுத்தவும் உதவும் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.
அரசியல் வேறுபாடுகளை ஆயுதங்களால் தீர்ப்பதை கைகட்டிப்பார்த்துக் கொண்டிருந்ததன் விளைவாகவும் தான் அகதி வாழ்க்கை வாழ நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம். தற்போழுது புகலிடங்களிலும் அவ்விஷச் சூழல் பரவ எத்தனிக்கிறது. சபாலிங்கத்தின் கொலையிலிருந்தாவது நாம் விழித்துக் கொண்டாக வேண்டும். இதனாலேயே எம்மை எதிர் கொண்டிருக்கும் பேராபத்திலிருது எம்மையும் எமது எதிகால சந்ததியையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். இதன் மூலமே அவரை நாம் நினைவு கூருவோம்.
தமிழ் மக்களே
சபாலிங்கத்தின் கொலையாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இங்குள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு சபாலிங்கத்தை கொலை செய்தவர்களை கைது செய்வதில் துரிதம் காட்டுமாறு முறையீட்டுக் கடிதங்களை எழுதுவோம்.
சகல சமூக நிறுவனங்களும் சங்கங்களும் இந்தக் கொலைக்கெதிரான கண்டனங்களை வெளியிடுங்கள்.
எங்கள் தயக்கங்களும், அச்சங்களும் ஆயுதக் கலாசாரத்தை மேலும் பரவவிடுவதற்கு வழிவகுத்து விடும். நேற்று பாரிசில் நடந்தது இனி லண்டனிலோ, கனடாவிலோ, ஜேர்மனியிலோ நடக்கலாம்.
இதைத் தடுத்து நிறுத்த வேண்டியது நாங்கள் தான்.
சபாலிங்கம் அஞ்சலிக் குழு – லண்டன்
04.05.1994
(புலிகளால் சபாலிங்கம் பாரிஸில் கோரமாக கொலை செய்யப்பட்ட போது லண்டனில் சபாலிங்கம் அஞ்சலில் குழுவால் 04/05/1994இல் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரம் இதுவாகும்)
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply