‘கராச்சி விடுதலை’ வாசகங்களுடன் வாஷிங்டன் நகரில் அணிவகுத்த டாக்ஸிகள்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் மனித உரிமைகளை மீறி வருவதாக கூறி #FreeKarachi என்ற வாசகங்களுடன் பல டாக்ஸிகள் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அணிவகுத்தன.பாகிஸ்தானில் உள்ள பலூச் மாகாணத்தை சேர்ந்தவர்கள் அந்நாட்டு அரசால் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், வளர்ச்சி திட்டங்கள் எதுவும் தங்களது பகுதியில் இடம் பெறுவது இல்லை எனவும் கூறி தங்களது மாகாணத்தை தனியாக பிரித்து பலூச்சிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இதற்காக ‘உலக பலூச் அமைப்பு’ என்ற இயக்கம் செயல்பட்டு வருகின்றது. பலூச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து மனித உரிமைகளை மீறி பல்வேறு அமைப்பினர் மீது தாக்குதல்களை நடத்திவருவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக லண்டன், நியூயார்க் ஆகிய நகரங்களில் பலமுறை ஆர்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லண்டன் நகரில் உள்ள பேருந்து மற்றும் டாக்சிகளில் ‘#FreeBalochistan’ என்ற வாசகங்கள் இடம்பெற்றன. பலூச்சில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் உலக அளவில் சென்று சேரவேண்டும் என்பதாலே இப்படி செய்ததாக அந்த அமைப்பினர் கூறினர்.

இதேபோல, நியூயார்க் நகர பேருந்து மற்றும் டாக்சிகளில் பலூச்சிஸ்தான் விடுதலை வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. மனித உரிமை மீறல், பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் மற்றும் சீனாவின் பட்டுசாலை திட்டம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.

பலூச்சிஸ்தான் விடுதலை அமைப்பு ஆதரவாளர்களின் மேற்கண்ட நடவடிக்கைகளால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்தது. இந்நிலையில், மேற்கண்ட அதே காரணத்தால் சிந்து மாகாணத்தை பாகிஸ்தானில் இருந்து பிரித்து கராச்சி தலைநகராக கொண்டு புதிய நாடு உருவாக்க வேண்டும் என சில அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

இனவெறி ஒழிப்பு போராளி மார்டின் லூதர் கிங் பிறந்த நாள் அமெரிக்காவில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வாஷிங்டன் நகரில் சிறப்பு பேரணி ஒன்று நடைபெற்றது. இந்த பேரணியில் கராச்சி விடுதலை “FreeKarachi” என்ற வாசகங்களுடன் பல டாக்ஸிகள் அணிவகுத்தன.

மேற்கண்ட நிகழ்வால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply