அமெரிக்கா மன்னிப்பு கோர வேண்டும்: வடகொரியா வலியுறுத்தல்

“எங்கள் நாட்டின் பெயரை வேண்டுமென்றே தவறாக குறிப்பிட்ட அமெரிக்க அரசு பகிரங்க மாக மன்னிப்பு கோர வேண்டும்” என்று வடகொரியா தெரி வித்துள்ளது.ஐ.நா.வுக்கான வடகொரிய தூதரக அலுவலகம் நியூயார்க்கில் செயல்படுகிறது. அந்த அலுவலகத்தில் ரீ சாங் சோல் மூத்த அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். வரிச் சலுகைக்கான அட்டை கோரி அவர் அமெரிக்க அரசிடம் விண்ணப்பம் செய்திருந்தார். அதன்படி அவருக்கான வரிச் சலுகை அட்டை அண்மையில் வழங்கப்பட்டது. அதில், ‘கொரிய ஜனநாயக குடியரசு’ என்ற பெயருக்குப் பதிலாக ‘வடகொரியா’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.

எழுத்துப் பிழை காரணமாக இந்த தவறு நேர்ந்திருக்கலாம் என்று கருதி வடகொரிய தூதரகம் அட்டையில் திருத்தம் கோரி அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தை அணுகியது. ஆனால் பெயரை திருத்தம் செய்ய அமெரிக்க வெளியுறவுத் துறை மறுத்துவிட்டது.

இதுகுறித்து வடகொரிய தூதரக மூத்த அதிகாரி ரீ சாங் சோல் கூறியபோது, “எங்கள் நாட்டின் பெயரை அமெரிக்க அரசு வேண்டுமென்றே தவறாகக் குறிப்பிடுகிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். எங்கள் நாட்டை ‘கொரிய ஜனநாயக குடியரசு’ என்று மட்டுமே குறிப்பிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

குளிர்கால ஒலிம்பிக்கில் ஒற்றுமை

அடுத்த மாதம் தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியா சம்மதம் தெரிவித்துள்ளது. தொடக்க விழாவின்போது தென்கொரியா, வடகொரியா விளையாட்டு வீரர்கள் ஒரே கொடியின் கீழ் மைதானத்தில் அணிவகுத்துச் செல்ல வடகொரியா ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் தென்கொரியா, வடகொரியாவைச் சேர்ந்த வீராங்கனைகள் இடம்பெறும் ஒரே பனிச்சறுக்கு ஹாக்கி விளையாட்டு அணியை உருவாக்கவும் இருதரப்பும் முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறியபோது, ‘‘அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளால் உலகில் வடகொரியா தனிமரமாகி உள்ளது. தற்போதைய குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்பதன் மூலம் உலகோடு ஒன்றி வாழ்வதற்கான சூழலை அந்த நாடு பெறுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது’’ என்று தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply