59 விமான நிலையங்களில் போலீஸ்காரர்களின் சட்டையில் மினி கேமரா பொருத்த திட்டம்

நாட்டில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் கவனித்து வருகின்றனர்.இந்த போலீசாருக்கும், பயணிகளுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுவது வாடிக்கையானதாக உள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையிலும், மேலும் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தும் வகையிலும் போலீசாருக்கு மினி கேமரா வழங்க முடிவு செய்யப்பட்டது.

மேலை நாடுகளில் இது போன்ற முக்கிய பணிகளில் ஈடுபடும் போலீசார் தங்கள் சட்டையில் மினி கேமராக்களை பொருத்தி இருப்பது வழக்கம். அதே போல் விமான நிலைய போலீசாருக்கும் கேமரா வழங்க திட்டமிட்டு அதற்கான ஆய்வு பணி நடந்தது.

டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் போலீசாருக்கு இந்த கேமராக்களை பொருத்தி பரீட்சார்த்தமாக ஆய்வு செய்தனர். அது சிறப்பாக அமைந்தது. எனவே, 59 விமான நிலையங்களில் போலீசாருக்கு மினி கேமராக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கேமரா சட்டையின் தோள்பட்டை பகுதியில் பொருத்தப்படும். வீடியோ- ஆடியோ காட்சிகள் அனைத்தையும் பதிவு செய்தபடி இருக்கும் இந்த கேமராவின் விலை ரூ.60 ஆயிரம். முதல் கட்டமாக ரூ.3 கோடிக்கு 500 கேமராக்கள் வாங்குகிறார்கள். அவை மார்ச் மாதத்துக்குள் 59 விமான நிலைய போலீசாருக்கு வழங்கப்படும்.

மேலும் இதேபோல் அதிக கேமராக்களை வாங்கி பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் போலீசாருக்கு இந்த கேமராக்களை வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply