காபுலில் ஆம்புலன்ஸ் குண்டு வெடிப்பில் பலி 95 ஆக உயர்வு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரின் மையப்பகுதியில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பழைய அலுவலகத்தின் அருகே இன்று பிற்பகல் பயங்கரமான குண்டு வெடிப்பு சப்தம் கேட்டது.ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த குண்டுகளை வெடிக்கச்செய்து தலிபான் தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 40 பேர் உடல் சிதறி உயிரிழந்தததாகவும் சுமார் 150 பேர் படுகாயம் அடைந்தததாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.
படுகாயமடைந்தவர்கள் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்பட்டது.
இன்று மாலை நிலவரப்படி இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. சோதனைச் சாவடி ஒன்றை கடந்து சென்ற இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நோயாளியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாக காவலர்களிடம் கூறியுள்ளார்.
அடுத்த சோதனைச் சாவடியை நெருங்கியபோது திடீரென்று வாகனத்தில் இருந்த குண்டுகளை வெடிக்க பதுக்கி வைத்திருந்த குண்டுகளை டிரைவர் வெடிக்கச் செய்ததாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், காட்டுமிராண்டித்தனமான இந்த தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’இதைப்போன்ற கோழைத்தனமான – காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதல்களை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்த கொடூரத்துக்கு காரணமானவர்களும், அவர்களை ஆதரிப்பவர்களும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துயரகரமான இவ்வேளையில் ஆப்கானிஸ்தான் மக்களுடன் துணையாக இருப்பதுடன், இந்த தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம். படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதுடன் அவர்களின் சிகிச்சைக்கு உதவுவதுடன் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply