சசிகலாவிடம் வருமான வரி அதிகாரிகள் விரைவில் விசாரணை
சசிகலா அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனைப் பெற்று பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் சசிகலா குடும்பத்தினர் போலி நிறுவனங்கள் நடத்தி வருமான வரி ஏய்ப்பு செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் வருமான வரித்துறையினர் அதிரடியாக சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தினார்கள். சுமார் ஆயிரம் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து 187 இடங்களில் இந்த வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஏராளமான ஆவணங்கள் சிக்கியது. அந்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது சசிகலா குடும்பத்தினர் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் நடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மூலம் சசிகலா குடும்பத்தினர் ரூ.1,430 கோடி வரி ஏய்ப்பு செய்து இருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் உரிய சம்மன் அனுப்பி சசிகலா குடும்ப உறுப்பினர்களை ஒவ்வொருவராக வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் போலி நிறுவனங்களின் ஆவணங்களில் சசிகலா பெயரும் இடம் பெற்றிருந்தது. இதனால் வரி ஏய்ப்புக்கும் சசிகலாவுக்கும் தொடர்பு இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
சசிகலாவிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தினால்தான் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு செல்ல முடியும் என்ற நிர்ப்பந்தம் வருமான வரித்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சசிகலாவை வரவழைத்து விசாரிக்கலாமா? என்று ஆய்வு செய்தனர். போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டு அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்டிரைவ்கள், கம்ப்யூட்டர்களில் உள்ள பதிவுகள், டிஸ்க்குகளில் இருக்கும் ஆதாரங்களை நேரில் காட்டி விசாரிக்க, சசிகலாவை வரவழைப்பதே உகந்ததாக இருக்கும் என்று நினைக்கின்றனர்.
குறிப்பாக குட்கா ஊழல் தொடர்பான கடிதம் சசிகலா அறையில் கிடைத்ததால் அந்த கடிதம் எப்படி அங்கு வந்தது என்பதற்கு அவர் தான் உரிய விளக்கம் தர முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் அவர் கைதியாக இருப்பதால் அவரை சென்னைக்கு வரவழைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சிறைக்கே சென்று சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக அவர்கள் அனுமதி கோரி பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைத்துறை அதிகாரிகளுக்கு 2 வாரங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பினார்கள்.
இதற்கிடையே சசிகலா சிறையில் கடந்த டிசம்பர் மாதம் மவுன விரதம் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். இதனால் சசிகலாவிடம் விசாரணை நடப்பது தாமதமாகிக் கொண்டே வந்தது. இதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து விசாரணைக்கு ஒத்துழைக்க சசிகலா முன்வந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சசிகலா உறவினர்களின் வீடுகளிலும், போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்து அறையிலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ள பல்வேறு கணக்குகள் பற்றி சசிகலாவிடம் முழுமையாக விசாரணை நடத்த வேண்டியதுள்ளது. பென் டிரைவ், டிஸ்குகளில் உள்ள தகவல்களுக்கு சசிகலா பதில் சொல்ல வேண்டும்.
பிப்ரவரி 10-ந்தேதிக்கு பிறகு பதில் சொல்வதாக சசிகலா சிறைத்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். எனவே அதுவரை காத்திருக்க முடிவு செய்துள்ளோம்.
பிப்ரவரி 10-ந்தேதிக்குப் பிறகு சென்னையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் குழு ஒன்று பெங்களூருக்கு செல்லும். பெங்களூர் சிறை வளாகத்தில் உள்ள அறையில் சசிகலாவிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டு விசாரிக்கப்படும்.
இந்த விசாரணை ஒரு நாளைக்கு மேல் நீடிக்கலாம். சசிகலாவின் பதில்கள் பதிவு செய்யப்படும். அதன் அடிப்படையில் எங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை அமையும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply