ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிடும் கோத்தா
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. அமெரிக்கக் குடியுரிமையை நீக்கிக் கொள்வதற்கான கோரிக்கையை கோத்தபாய முன்வைத்துள்ளார். விரைவில் குடியுரிமை இல்லாமல் செய்யப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
குடியுரிமையை நீக்கிக் கொள்வதற்குத் தேவையான சட்டரீதியான நடவடிக்கைகளுக்காக கோத்தபாய அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். தனக்கு நெருக்கமானவர்களுடன் எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் திட்டங்களைத் திட்டமிட்டுள்ளார்.
அதற்கமைய மறைந்த அவரது சகோதரர் டட்லி ராஜபக்சவின் அமெரிக்க வீட்டில் தனக்கு நெருக்கமானவர்களுடன் அரசியல் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள ஒளிப்படங்கள் சில வெளியாகியுள்ளன. எனினும் கோத்தபாயவின் அரசியல் வருகையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. கோத்தபாயவுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனச் சில தரப்பினர் எண்ணிய போதிலும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
கோத்தபாயவை கைது செய்வதற்குக் குற்ற விசாரணைத் திணைக்களம் கடந்த காலங்களில் தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் உயர் அரசியல் அழுத்தம் காரணமாக அது தடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply