தென் கொரியாவில் நாளை குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்கம் – வட கொரிய தலைவரின் தங்கை பங்கேற்பு

வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகைமை நிலவி வந்தது. வட கொரியாவின் தொடர் அணு ஆயுத திட்டங்கள், ஏவுகணை திட்டங்கள் காரணமாக இரு நாடுகள் இடையே எப்போதுமே பதற்றம் தொற்றிக்கொண்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நாளை (9-ந் தேதி) தொடங்கி, 25-ந் தேதி முடிகிறது.

இந்த போட்டியில் வடகொரியாவும் பங்கேற்கிறது. இதற்காக தடகள வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் என 280 பேரை கொண்ட வடகொரிய குழு, நேற்று உள்ளூர் நேரப்படி காலை 9.28 மணிக்கு தென்கொரியா சென்று அடைந்தது.

இந்த குழுவுக்கு வட கொரிய விளையாட்டு துறை மந்திரி கிம் இல் கக் தலைமை தாங்குகிறார். நாளை நடக்கிற தொடக்க விழாவில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் தங்கை கிம் யோ ஜாங் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவர் எப்போதுமே தனது சகோதரர் கிம் ஜாங் அன்னுடன் காணப்பட்டு வந்து உள்ளார். மேலும், இவர் வட கொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சியின் அரசியல் விவகார உயர் மட்டக்குழு உறுப்பினராக உள்ளார்.

தென்கொரியாவில் நடக்கிற குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் இவர் பங்கேற்பது முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் தொடக்க விழாவில் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சும் கலந்துகொள்கிறார்.

கிம் யோ ஜாங், தொழிலாளர் கட்சியின் அதிகாரமிக்க செயலாளர் சோ ரியாங் ஹேயின் மகனை திருமணம் செய்துகொண்டு உள்ளதாக தெரிகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply