பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர் உலக பயங்கரவாதிகளாக அறிவிப்பு
பாகிஸ்தானை சேர்ந்த 3 பேரை உலக பயங்கரவாதிகளாக அறிவித்ததுடன், அவர்கள் மீது பொருளாதார தடையும் விதித்து அமெரிக்கா நடவடிக்கை எடுத்து உள்ளது. அமெரிக்காவின் உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு போரில், கூட்டாளியாக உள்ள பாகிஸ்தான், தன் மண்ணில் இருந்து செயல்படுகிற பயங்கரவாதிகளை ஒடுக்குவது இல்லை. இது அந்த நாட்டின் மீது அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த 3 பயங்கரவாதிகளை உலக பயங்கரவாதிகளாக அமெரிக்க அரசின் நிதித்துறை அறிவித்து நடவடிக்கை எடுத்து உள்ளது. அவர்கள், ரகுமான் ஜெப் பக்கீர் முகமது, ஹிஸ் உல்லா அஸ்தம்கான், திலாவர் கான் நதிர் கான் ஆவார்கள்.
அவர்களுடன் அமெரிக்க குடிமக்கள் எந்தவொரு தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கூறப்பட்டு உள்ளது. அவர்கள் மீது பொருளாதார தடையும் விதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவுடன் தொடர்பு உடைய அவர்களின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்பட்டு உள்ளன.
லஷ்கர் இ தொய்பா, தலீபான் போன்ற பயங்கரவாத இயக்கங்களுடன் அவர்கள் கொண்டு உள்ள தொடர்பின் நிமித்தமாக உலக பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக பயங்கரவாதம், நிதி நுண்ணறிவு பிரிவை சேர்ந்த துணைச்செயலாளர் சிகால் மாண்டெல்கர் கூறுகையில், “தெற்கு ஆசியாவில், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்போரையும், சட்டவிரோத நிதி அமைப்புகளை நடத்துகிற பயங்கரவாதிகளையும் அமெரிக்க நிதித்துறை தீவிரமாக பின்தொடரும், அவர்களை அம்பலப்படுத்தும்” என்று குறிப்பிட்டார்.
மேலும், “அவர்கள் அல்கொய்தா, லஷ்கர் இ தொய்பா, தலீபான் மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளுக்கு தளவாட ஆதரவு, வெடிபொருட்கள், பிற தொழில்நுட்ப உதவிகள் வழங்குவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்” என்றும் கூறினார்.
அத்துடன், “இது பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுதலை இடையூறு செய்வதற்காக இந்த நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிற பரந்த முயற்சியில் ஒரு அங்கம் ஆகும். இத்தகைய ஆபத்தான நபர்களுக்கும், அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் அரசும், பிராந்தியத்தில் உள்ள மற்றவர்களும் புகலிடம் அளிக்கக்கூடாது” என்றும் குறிப்பிட்டார்.
உலக பயங்கரவாதிகளில் ஒருவராக அறிவிக்கப்பட்டு உள்ள ரகுமான் ஜெப் பக்கீர் முகமது, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு நிதி, பொருள், தொழில்நுட்ப உதவி அளித்து வந்து உள்ளார். பல்லாண்டு காலமாக லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முக்கிய பிரமுகராக இருந்து வந்து உள்ளார். வளைகுடாப் பகுதியில் லஷ்கர் இ தொய்பா அமைப்புக்காக நிதி வசூலிக்கும் பொறுப்பில் இருந்து இருக்கிறார். 2016-ம் ஆண்டு, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா முக்கிய புள்ளிக்கு நிதி மாற்றங்களை செய்து இருக்கிறார். ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள லஷ்கர் இ தொய்பா அமைப்பினருடன் நீண்ட காலமாக தொடர்பு வைத்து இருந்து உள்ளார்.
ஹிஸ் உல்லா அஸ்தம்கான், பயங்கரவாத இயக்க தளபதியான அமினுல்லா என்பவருக்காக செயல்பட்டு வந்து உள்ளார்.
அமினுல்லாவுக்கு ஆதரவு அளித்து வந்ததுடன், பெஷாவர் நகரில் உள்ள மதப்பள்ளிக்கூடத்துக்கு நிதி அதிகாரியாகவும் இருந்து உள்ளார். அமினுல்லா 2013-ம் ஆண்டு வளைகுடா செல்வதற்கும் உதவிக்கரம் நீட்டி உள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள குணார் மாகாணத்தில், ஐ.இ.டி. என்று அழைக்கப்படுகிற சக்தி வாய்ந்த வெடிகுண்டு தயாரிப்பில் நிபுணராகவும் அமினுல்லாவுக்காக செயல்பட்டு உள்ளார்.
திலாவர் கான் நதிர் கானும், ஹிஸ் உல்லா அஸ்தம்கான் போலவே அமினுல்லாவுக்காக செயல்பட்டு வந்து உள்ளார். அவருக்காக நிதிப் பரிமாற்றங்களையும் செய்து இருக்கிறார்.
ஒரே நேரத்தில் தனது நாட்டை சேர்ந்த 3 பேரை அமெரிக்கா உலக பயங்கரவாதிகளாக அறிவித்து அவர்களுக்கு பொருளாதார தடை விதித்து இருப்பது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியாக அமைந்து உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply