புளோரிடா பள்ளியில் துப்பாக்கி சூடு – முன்னாள் மாணவனின் வெறிச்செயலுக்கு 17 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. துப்பாக்கி சர்வசாதாரணமாக புழங்குவதால் வன்முறையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் மாணவர்கள் நடத்தும் தாக்குதல்கள், பொது இடங்களில் நடத்தப்படும் தாக்குதல்களில் பலர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் புளோரிடா மாகாணத்தில் உள்ள மார்ஜரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலை பள்ளி பள்ளியில் நேற்று துப்பாக்கியுடன் திடீரென நுழைந்த ஒரு மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி வெறித்தனமாக சுட்டுள்ளார். இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அவர்களில் சிலர் துப்பாக்கி தோட்டா துளைத்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அப்பகுதிக்கு விரைந்த போலீசார் அனைவரையும் வெளியேற்றி பள்ளி வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய நபர் சரண் அடைந்தார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பள்ளி வளாகத்தினுள் 12 பேரும், வெளிப்பகுதியில் 3 பேரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழப்பு 17 ஆக உயர்ந்தது.

தாக்குதல் நடத்திய வாலிபர் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் நிகோலஸ் குரூஸ் என்பதும், ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக பள்ளியில் இருந்து நீக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் இந்த ஆண்டில் இதுவரை 18 துப்பாக்கி சூடு நம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply