வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பதவியை முன்னணிக்கு தருமாறு கோரிக்கை
வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் சி.தவராசா இருந்துவரும் நிலையில், அந்தப் பதவியை அவரிடமிருந்து பிடுங்கித் தமக்கு வழங்குமாறு, மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
அதனால் அந்தப் பதவியைப் பிடுங்கிக் கொடுப்பதா அல்லது தொடர்ந்தும் தவராசாவையே இருக்க அனுமதிப்பதா என்பது தொடர்பில் இழுபறிநிலை காணப்படுகிறது என்று அறியமுடிகிறது. அந்தப் பதவி தமக்குத்தான் தரப்படவேண்டும் என்று ஐக்கிய சுதந்திர முன்னணி போர்க்கொடி தூக்கியுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
மாகாணசபைத் தேர்தலின் பின்னர் சபையின் எதிர்க்கட்சித் தலைவராக ஈ.பி.டி.பி கட்சியை சேர்ந்த க.கமலேந்திரன் (கமல்) பதவி வகித்தார். அதே கட்சியைச் சேர்ந்த, பிரதேச சபைத் தவிசாளராக இருந்த றெக்க்ஷியன் என்பவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் கமல் கைது செய்யப்பட்டார். அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டவுடன் கட்சி கமலைத் தூக்கி எறிந்தது. அவரது உறுப்பினர் பதவியும் பறிபோனது. இந்த நிலையில் எதிர்க் கட்சித் தலைவராக ஈ.பி.டி.பி கட்சியைச் சேர்ந்த சி.தவராசா பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன்பின்னரும், அவரது கட்சிக்குள் ஏற்பட்ட உள் முரண்பாடு கள் காரணமாக சி.தவராசாவையும் அந்தப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஈ.பி.டி.பியினர் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். எனினும் சபையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போதும் தவராசாவே எதிர்க்கட்சித் தலைவராக பதவிவகித்து வருகின்றார்.
வடக்கு மாகாண சபையின் ஆயுள்காலம் சில மாதங்களில் நிறைவுபெறவுள்ளது. இந்தநிலையில் சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து தவராசாவை நீக்கிவிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாகப் போட்டியிட்டு வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினராக உள்ள பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஜெயதிலகவை அந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாண உறுப்பினர்கள், மாகாண சபையின் அவைத்தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று அறிய முடிகின்றது.
இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பில் நாம் முயற்சி எடுத்துள்ளமை உண்மைதான்.
இது தொடர்பாக நாம் கட்சி உயர் மட்டத்தினருடன் பேசி வருகின்றோம். அவைத் தலைவரிடமும் பேசியுள்ளோம். மேலதிக விவரங்கள் நாம் முடிவு எடுத்த பின்னரே தெரிவிக்க முடியும், என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply