அமெரிக்காவில் இந்திய குடும்பம் மாயம் ஆனதில் பெண்ணின் உடல் மீட்பு

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், வேலன்சியா நகரில் வசித்து வந்த இந்தியரான சந்தீப் (வயது 42) என்பவர், தனது மனைவி சவுமியா (38), மகன் சித்தாந்த் (12), மகள் சாச்சி (9) ஆகியோருடன் காரில் ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகருக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்கள் வழியில் மாயம் ஆனார்கள்.

6-ந் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதில், சந்தீப்பின் காரைப் போன்ற ஒரு கார் அங்கு ஹம்போல்ட் நகருக்கு அருகே கார்பர் வில்லே என்ற இடத்தில் வெள்ளம் கரை புரண்டோடுகிற ஏல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிய வந்தது. அதைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

இப்போது கலிபோர்னியாவை சேர்ந்த மீட்பு படையினர் சவுமியாவின் உடலை, ஏல் நதியில் கார் அடித்துச்செல்லப்பட்ட இடத்தில் இருந்து 7 மைல்கள் வடக்கே 13-ந் தேதி கைப்பற்றி உள்ளனர். மேலும் சந்தீப் குடும்பத்தினருக்கு சொந்தமான பொருட்கள், காரின் பல பாகங்களும் மீட்கப்பட்டு உள்ளன. இவை சந்தீப் குடும்ப உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டு உள்ளன.

அந்தப் பொருட்களைப் பற்றிய கூடுதல் விவரங்களை இப்போது தெரிவிக்க முடியாது என கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் படையினர் கூறினர்.

அதே நேரத்தில் அவை ஏல் நதியில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக நம்பப்படுகிற சந்தீப் குடும்பத்தினருடையதுதான் என அவர்கள் உறுதி செய்தனர்.

சந்தீப் குஜராத் மாநிலம் சூரத் நகரில் வளர்ந்தவர் என்றும், 15 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவுக்கு சென்று குடியேறியவர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply