ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும்: அரபு நாடுகள் வலியுறுத்தல்
_சிரியாவில் ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ராணுவத்துக்கு ஆதரவாக ரஷியாவும், ஈரானும் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன. மேலும் சிரியாவின் ஒரு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறி வைத்து அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டூமா நகரில் கடந்த வாரம் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான குழந்தைகள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாயினர். இதற்கு சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இதுபற்றி அரபு நாடுகள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், ‘சிரியா நாட்டு மக்கள் மீது ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். இது தொடர்பாக சர்வதேச அளவிலான சுதந்திரமான நீதி விசாரணை தேவை. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சர்வதேச சட்ட விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மற்ற நாடுகளின் விவகாரங்களில் ஈரான் தலையிடுவதையும் கண்டிக்கிறோம். ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக அமெரிக்க கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலை ஆதரிக்கிறோம்’ என்று கூறப்பட்டு உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply