விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய கட்சிக்கு ஆதரவு : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
_முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை ஆரம்பித்து கொள்கை பற்றுடன் செயற்படுவாராக இருந்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதனை வரவேற்கும் எனத் தெரிவித்திருக்கும் அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையே இன்று தமிழ் தேசத்தின் சாபக்கேடாக மாறியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.__
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனிக் கட்சி ஒன்றை உருவாக்க உள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக கேட்டபோதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த விடையம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனியான கட்சி ஒன்றை உருவாக்க உள்ளதாக அறிகிறோம். அந்த தகவல் உண்மையாக இருந்தால் அதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வரவேற்கிறது. மேலும் முதலமைச்சர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வந்த முதலமைச்சராகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராகவும் இருந்தவர்.
ஆகவே கூட்டமைப்பின் கொள்கைகளுடன் முரண்பட்டாலும் முதலமைச்சர் கூட்டமைப்பின் முதலமைச்சராகவும், கூட்டமைப்பின் உறுப்பினராகவும் இருந்தவர். அந்தவகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையின் கொள்கைகளுடன் இணங்கி செயற்பட இயலாது என்பதை முதலமைச்சருடைய பல உரைகளில் இருந்து அவதானிக்க கூடியதாக இருந்தது.
அது தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை பாதிக்கும் என்ற நிலைப்பாடு வெளிப்பட்டிருக்கின்றது. அதனையே நாங்களும் கூறுகிறோம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகள் தமிழ் மக்களின் சாபக்கேடாக மாறியிருக்கின்றது.
மேலும் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தால் முதலமைச்சர் எப்படி செயற்பட போகிறார்? எப்படியானவர்கள் அவர்களுடைய கட்சியில் கூட்டு சேர போகிறார்கள்? என்பதும் முக்கியமான விடயமாகும். அந்த வகையில் முதலமைச்சர் கொள்கையில் விட்டுக் கொடுப்பில்லாத தரப்புக்களுடன் கூட்டு சேரவேண்டும் என நாங்கள் எதிர்பார்கிறோம்.
நாங்கள் உள்ளூராட்சி சபை தேர்தல் காலத்தில் கொள்கைவாதிகள் என நம்பி ஒரு தரப்புடன் கூட்டுசேர்வதற்காக முயற்சித்திருந்தோம். ஆனால் அது கடைசியில் கொள்கையே இல்லாத தரப்புக்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டது. அப்படியான தரப்புக்களுடன் முதலமைச்சர் எக்காலத்திலும் கூட்டுசேர கூடாது. காரணம் அவர்களுடைய கொள்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையிலும் பார்க்க ஆபத்தான கொள்கையாக உள்ளது.
ஆகவே முதலமைச்சர் கொள்கையில் விடாப்பிடியான தரப்புக்களுடன் கூட்டு வைப்பாராக இருந்தால் அவருடன் இணைந்து செயற்படுவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாராகவே உள்ளது. மேலும் உள்ளூராட்சி சபை தேர்தலின் ஊடாக தூய்மையான தமிழ் தேசிய வாதத்திற்கான அடித்தளம் இடப்பட்டிருக்கும் நிலையில் முதலமைச்சர் தனியான கட்சி ஒன்றை உருவாக்குவதாக எழுந்துள்ள செய்திகள் முக்கியத்துவமானவை என கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply