ஆதாரங்களை வெளியிடுமாறு ரெலோ சிறிகாந்தா கோரிக்கை
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரிம் பேரம் பேசியதாக கூறப்படும் ஆதாரங்கள் இருக்குமாயின், ஆதாரங்களை வெளியிடுங்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – ரெலோவின் செயலாளர் நாயகமும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தா தெரிவித்தார். இச்சந்திப்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினருமான எஸ்.குகதாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தம்முடன் பேசிய ஆதாரங்கள் இருப்பதாக கூறிய கருத்திற்கு பதிலளிக்கும் முகமாக இப்பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று யாழ். நகரில் உள்ள யு.எஸ் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
அந்த சந்திப்பின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எந்த கட்சியிடமும் தாம் ஆதரவு கோரவில்லை என்று கூறியிருந்தார். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தம்முடன் பேசியதற்கான ஆதாரம் இருப்பதாக ஈ.பி.டி.பியினர் கூறியிருக்கின்றார்கள்.
இந்த விடயங்களை மக்கள் மத்தியில் தெரியப்படுத்த ஏன் தயக்கம் காட்டுகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆதாரங்களை பொத்தி வைத்துக்கொள்ளாது, ஆதாரங்களை வெளியிடுங்கள். எம் தரப்பில் இருந்தும் உரிய பதில் வெளிவரும்.
கோட்பாட்டின் அடிப்படையில் ஈ.பி.டி.பி உட்பட ஏனைய கட்சிகளிடம் சம்மதம் கேட்கப்பட்டுள்ளது. தொலைபேசி அழைப்புகளும் மேற்கொள்ளப்பட்டது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் உட்பட ஏனையவர்கள் ஒலிப்பதிவு நாடாக்களை வைத்திருக்கின்றார்கள் என்றால், அப்போது என்ன பேசியிருக்கின்றார்கள் என்பது தெரியவரும்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபை பறிபோன விரக்தியில் இந்த விடயங்களை முன்வைக்கின்றார்கள். அங்கு கூட்டாட்சி என்றோ, தனி சபைகள் என்றோ பேரம் பேசவில்லை.
அவ்வாறு பேரம் பேசியிருந்தால், பேரம் பேசியதற்கான ஆதாரங்களை வெளியிடுங்கள். அதன்பின்னர் ஏற்றுக்கொள்கின்றோம். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் யாழ்.மாநகர சபை உள்ளிட்ட பல உள்ளுராட்சி சபைகளில் ஆதரவு வழங்கியிருந்தார்கள்.
ஆனால், கரவெட்டி மற்றும் வேலணையில் மாறியதால், நெடுந்தீவைக் கைப்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. கரவெட்டி மற்றும் வேலணையில் ஆதரவு தந்திருந்தால், நெடுந்தீவினை விட்டுக்கொடுத்திருப்போம் என்றும் சுட்டிக்காட்டினார்.
பல உள்ளூராட்சி சபைகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் காலை வாரிவிட்டார்கள். தற்போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உத்தமர்கள் போன்றும், மகாத்மா காந்தி போன்றும் நடிக்கின்றார்கள்.
எனவே, உரிய நேரம் வரும் போது தோல் உரிப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply