அமெரிக்காவில் எச் 1-பி விசா: இனி வாழ்க்கை துணைவர்களுக்கு பணி அனுமதி கிடையாது
_அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவி வகித்த காலத்தில் (2015-ம் ஆண்டு) ‘எச்-1’ பி விசாவில் அமெரிக்காவில் பணியாற்றுகிறவர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு (ஆண் என்றால் மனைவிக்கும், பெண் என்றால் கணவருக்கும்) ‘எச்-4’ விசா அளித்து, வேலை பார்க்கும் வாய்ப்பினை வழங்கினார்.
இதன் காரணமாக ‘எச்-1’ பி விசாவில் அமெரிக்காவில் வேலை பார்க்கிற ஆண்களின் மனைவிமாருக்கும், பெண்களின் கணவர்களுக்கும் அங்கேயே வேலை பார்க்கும் வாய்ப்பு (ஒர்க் பெர்மிட்) கிடைத்தது. இது அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிற தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வரமாக அமைந்தது.__
ஆனால் தற்போதைய டிரம்ப் நிர்வாகம், “அமெரிக்க பொருட்களையே வாங்குங்கள்; அமெரிக்கர்களையே வேலைக்கு அமர்த்துங்கள்” என்ற கொள்கையை அறிவித்து தீவிரமாக பின்பற்றி வருகிறது.
இந்த நிலையில், ஒபாமா காலத்தில் ‘எச்-1’ பி விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு வழங்கி வந்த ‘ஒர்க் பெர்மிட்’ முறையை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யு.எஸ்.சி.ஐ.எஸ்.) இயக்குனர் பிரான்சிஸ் சிஸ்னா, சுக் கிராஸ்லே என்ற செனட் சபை எம்.பி.க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். இதுகுறித்த அறிவிப்பு, இந்த கோடை காலத்தின் பிற்பகுதியில் வெளியிடப்படும் என அவர் அதில் தெரிவித்து உள்ளார்.
தற்போது அமெரிக்காவில் ‘எச்-1’ பி விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்கள் 71 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்தியர்கள். இந்த விஷயத்தில் டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டால், அவர்கள் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply