நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட முடியாது- மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம்
_முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.__
இந்த நிலையில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவு செய்தவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின் அடிப்படையில், தன்னையும் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நளினி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சத்யநாராயணன், ‘சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கில் பிறப்பிக்கப்படும் இறுதி தீர்ப்பின் அடிப்படையில், நளினியின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து சட்டப்படி முடிவு எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நளினி மேல்முறையீடு செய்தார்.
இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் நீதிபதி சசிதரன் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, முன்கூட்டியே நளினியை விடுதலை செய்யும்படி உத்தரவிட முடியாது எனக் கூறிய நீதிபதிகள், நளினி தொடர்ந்த மேல்முறையிட்டு மனுவை நிராகரித்தனர்.
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், உயர்நீதிமன்றம் இதில் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply