பாலியல் வழக்கு விசாரணை: வாடிகன் மூத்த அதிகாரி கோர்ட்டில் ஆஜர்

_கத்தோலிக்க திருச்சபையின் தலைமை பீடமான வாடிகனின் 3-வது உயர்ந்த அதிகார மையம், கார்டினல் பெல் (வயது 76) ஆவார். இவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ்சின் மூத்த உதவியாளர்களில் ஒருவர். இவர் ஆஸ்திரேலியாவில் பணியாற்றியபோது, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.

 

இந்த குற்றச்சாட்டுகளை கார்டினல் பெல் தொடர்ந்து மறுத்து வருகிறார்.__

 

இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை அவர் சட்டப்படி சந்திப்பதற்கு வசதியாக விடுமுறையில் செல்வதற்கு கடந்த ஆண்டு போப் ஆண்டவர் பிரான்சிஸ் அனுமதி அளித்தார். அதன்பேரில் அவர் ஆஸ்திரேலியா சென்றார்.

 

அவர் மீதான வழக்கு, மெல்போர்ன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர் ஆனார். அப்போது அவர் மீது மாஜிஸ்திரேட்டு பெலின்டா வாலிங்டன் பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். அப்போது கார்டினல் பெல் “நான் குற்றவாளி இல்லை” என்று கூறி திட்டவட்டமாக மறுத்தார்.

 

இருப்பினும், இந்த வழக்கில் கார்டினல் பெல் மீதான சில குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறது, மற்றவற்றுக்கு ஆதாரம் இல்லை, எனினும் அவர் விசாரணையை எதிர்கொண்டாக வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு பெலின்டா வாலிங்டன் குறிப்பிட்டார்.

 

விசாரணையின்போது கார்டினல் பெல், கைகளை கட்டிக்கொண்டு, உன்னிப்பாக கோர்ட்டு நடவடிக்கையை கவனித்தது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply