வெள்ளாமுள்ளி வாய்க்கால் பகுதியில் பிரபாகரனின் பதுங்கு குழியை சுற்றி விசேட தொலைதூர சினைப்பர் படையணிகள்

புதுமாத்தளன் பிரதேசத்தில் யுத்த நடவடிக்கைகளற்ற வலயப்பகுதியில் பொதுமக்களை மனிதகேடயங்களாகப் பயன்படுத்தி அங்குள்ள பதுங்குக்குழி நிலையங்களில் மறைந்திருக்கும் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனையும் மற்றும் பொட்டு அம்மான் உட்பட உயர்மட்டத் தலைவர்களும் அங்கிருந்து தப்பிப்போக முடியாத வகையில் குறித்த பகுதியைச்சுற்றி தொலைதூரக் குறிவைப்பு நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்ட விசேட படையணிகள் துப்பாக்கிகளுடன் இரண்டு படையணிகள் நிலைகொண்டுள்ளதாக பாதுகாப்புத்தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு பிரபாகரன் மற்றும் தலைவர்கள் அங்கிருந்து தப்பியோட எத்தனிப்பார்களேயானால் அவர்களை உடனடியாகச் சுற்றி வளைத்து உயிருடன் பிடிப்பதற்கும் அல்லது சுட்டுக்கொல்வதற்கும் தயாரான நிலையிலேயே மேற்படி இரண்டு விசேட அதிரடிப்படை பிரிவினரும் அங்கு சுற்றி வளைத்துள்ளனர்.

பிரபாகரன், பொட்டு அம்மான் மற்றும் தலைவர்கள் பதுங்கியிருக்கும் பதுங்கு குழி நிலையங்களிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்துக்குள்ளேயே மேற்படி தொலைதூர துப்பாக்கிப் படையணிகள் நிலைகொண்டிருப்பதாகவும் இவை 53ஆம் 58 ஆம் இராணுவப்படைப் பிரிவைச் சேர்ந்த விசேட பயிற்சிபெற்ற அதிரடிக்குழுவினர் எனவும் இவர்கள் மேற்கொள்ளவிருக்கும் தாக்குதல் நடவடிக்கைகளே புலிகள் இயக்கத்தலைவர்களை உயிருடன் பிடிக்கும் அல்லது முற்றாக அழிக்கும் இறுதித் தாக்குதல் நடவடிக்கையாக இருக்கும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரபாகரனும் தலைவர்களும் பதுங்கு குழியிலிருந்து சிவில் உடைகளுடன் வெளியேறி பொதுமக்களுடன் மக்களாகத் தப்பிச்செல்லக்கூடிய வாய்ப்புகள் பற்றியே பெரும்பாலும் பேசப்பட்டுவருவதாகவும் தவிர அவர்கள் பதுங்குக்குழிகளிலிருந்து வெளியேறி படையினருடன் மோதும் சாத்தியங்கள் மிகக் குறைவே எனவும் அவ்வாறு மோதும் பட்சத்தில் பெரும் படைபலத்துடன் சுற்றிவளைத்திருக்கும் விசேட அரசபடையணிகளால் அவர்கள் உடனே சுட்டுக் கொல்லப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பிரபாகரனும் தலைவர்களும் இவ்வாறு இராணுவத்தாருடன் மோதும் பலமோ நிலைமையோ தற்போது இல்லை. உயிருடன் எப்படித் தப்பிச்செல்வது என்பதே அவர்களின் பிரச்சினையாக உள்ளது. அவ்வாறு பொதுமக்கள் வேடத்தில் பிரபாகரன் தப்பிச்செல்ல முயன்றாலும் அதைக் கண்காணிப்பதற்கான விசேட தொலைதூரநோக்கு உபகரணங்கள் பொருத்தப்பட்ட விசேட துப்பாக்கிகளுடன் காத்திருக்கும் இராணுவத்தினரின் பார்வையிலிருந்து அவர்கள் தப்பமுடியாது.

பிரபாகரனும் தலைவர்களும் தற்போது மறைந்திருக்கும் பதுங்குக்குழி நிலையங்களைசுற்றி நெருக்கமாக நிலக்கண்ணிகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் எனவே பதுங்குக்குழிகளை அரசபடையினர் நெருங்கும் பட்சத்தில் அவற்றை வெடிக்கவைக்கத் தயாராக பிரபாகரனின் பதுங்குக்குழி பகுதிகளில் புலிகள் இயக்கத்தினர் உள்ளனர் எனவும் மேலும் தெரியவந்துள்ளது. மேற்படி புதுமாத்தளன் மக்கள் பாதுகாப்புப் பகுதியிலிருந்து அண்மையில் இரகசியமாக வெளியேறி இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள பொட்டு அம்மானின் நெருங்கிய சகாக்கள் இருவர் இராணுவப் புலனாய்வின்போது தெரிவித்த தகவல்களில் தற்போது பிரபாகரனும் பொட்டு அம்மான் மற்றும் தலைவர்களும் புலிப்படையின் சீருடைகளை அணிவதில்லை எனவும் பதுங்குகுழிகளில் அவர்கள் பொதுமக்கள் போல் சிவில் உடைகளிலேயே இருப்பதாகவும் இவ்வாறு தருணம் கிடைக்கும்போது அல்லது வெளியார் உதவியுடன் அங்கிருந்து தப்பிச்செல்ல நேர்ந்தால் பொதுமக்கள் போன்ற தோற்றத்தில் தப்பிச்செல்வதே அவர்களின் திட்டம் எனவும் தெரிவித்துள்ளனர். அண்மையில் சரணடைந்துள்ள பொட்டு அம்மானின் நெருங்கிய சகாக்கள் இருவரும் ரொசி உளப்படையின் முக்கிய குழுத்தலைவர்களாவர்.

இந்நிலையில், பிரபாகரனும் தலைவர்களும் தப்பிச்செல்லக்கூடிய அனைத்து தரை மார்க்கங்களும் தற்போது மூடப்பட்டு விட்டன. கடல் மார்க்கங்களைப் பொறுத்தவரை சிறிலங்கா கடற்படையினரின் அதிதீவிர கண்காணிப்பு ரோந்து நடவடிக்கைகள் தற்போது முல்லைத்தீவு, திருகோணமலை கடற்பிராந்தியங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறே இந்திய தென்பிராந்திய கடற்படையினரும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பிரபாகரனையும் தலைவர்களையும் தப்புவிப்பதற்காக யுத்தநிறுத்தம், நிவாரண நடவடிக்கைகள் என்ற பெயரில் மேற்குநாடுகள் மேற்கொண்ட முயற்சிகளையும் அரசு நிராகரித்துவிட்டது. இந்நிலையில், பிரபாகரனுக்கு இறுதியாக இயலக்கூடிய இரண்டு காரியங்கள் உள்ளன. ஒன்று சயனைற் குப்பிகளை விழுங்கித் தற்கொலை செய்வது. மற்றொன்று பதுங்குகுழியிலிருந்து வெளியேறி இராணுவத்தினருடன் நேருக்குநேர் மோதி உயிரிழப்பது. எவ்வாறாயினும் பிரபாகரனையும் பொட்டு அம்மான் மற்றும் தலைவர்களையும் உயிருடன் பிடிக்க வேண்டும் என்பதே பாதுகாப்பு உயர்பீடத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. திவயின செய்தியும் விமர்சனமும்: 03.05.2009

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply