சகல தமிழ்க் கட்சிகளும் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தினால் ஜனாதிபதியுடன் சந்திப்பு:தமிழ் தேசிய கூட்டமைப்பு
சகல தமிழ் கட்சிகளும் கூட்டாக முதலில் யுத்த நிறுத்தம் என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் வலியுறுத்துமானால் நாளை ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொள்வது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது.கடந்த வாரம் மாற்றுக் கொள்கை நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பொன்றில், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பாகவும் அவர்களை நேரில் சென்று பார்வையிடுவது தொடர்பாகவும் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசுவது என நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மற்றும் வகிக்காத தமிழ்க் கட்சிகள் தீர்மானித்திருந்தன.
நாளை ஜனாதிபதி தமிழ்க் கட்சிகளுடனான சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இன்று மாலை, சகல தமிழ்க் கட்சிகளும் மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தில் இந்தச் சந்திப்பு தொடர்பாக கூடி ஆராயவுள்ளன.இது தொடர்பாக இன்று காலை தாம் கூடி ஆராய்ந்ததாக கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று மாலை நடை பெறவிருக்கும் சந்திப்பில் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவிருப்பதாகக் கூறினார்.
“வன்னியில் இடம் பெயர்ந்துள்ள மக்களைப் பார்வையிட்டு அவர்களது பிரச்சினைகளை மட்டும் ஆராய்வது முக்கியமல்ல. வன்னியில் இடம்பெயராமல் இருக்கும் மக்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
முதலில் யுத்த நிறுத்தம் தேவை. இதனை ஒருமித்த கருத்தாக சகல தமிழ்க் கட்சிகளும் ஜனாதிபதியிடம் வலியுறுத்த முன் வந்தால் தான் நாளை சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கலந்து கொள்ளும். இல்லையேல் கலந்து கொள்ள மாட்டாது. இது தான் எமது நிலைப்பாடு” என்றும் குறிப்பிட்டார் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply