முகாம்களுக்கு மனிதநேயப் பணியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்: ஜப்பான்

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு சர்வதேச அமைப்புக்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் சென்று வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் ஜசூசி அகாசி இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் நலன்புரி நிலையங்களின் நிலைமை தரமானதாக இல்லாவிட்டாலும், அரசாங்கம் தன்னால் முடிந்ததைச் செய்துவருகிறது என்றார் அவர்.

“நான் முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்கள் பலருடன் கலந்துரையாடியிருந்தேன். குடும்பங்கள் பிரிக்கப்பட்டமை குறித்தே பெரும்பாலான மக்கள் தமது கவலைகளை வெளியிட்டிருந்தனர். அவர்களின் இந்தக் கவலையை ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடும்போது எடுத்துக் கூறியிருந்தேன். இந்த விடயம் குறித்துத் தாம் ஏற்கனவே அறிந்துகொண்டிருப்பதாகவும், பிரிந்த குடும்ப உறுப்பினர்களை மீண்டும் இணைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர்கள் உறுதியளித்தனர்” என்றார் ஜசூசி அகாசி.

அதேநேரம், வடபகுதியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்காகத் தென்பகுதியில் பெருமளவான சிங்களவர்கள் உதவிப் பொருள்களை வழங்கிவருவது மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தால் நட்புறவும், ஒருமைப்பாடும் வளரும் என நான் நினைக்கிறேன்” என்றார் ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் அகாசி.

இதேவேளை, டோக்கியோ உதவிவழங்கும் இணைத்தலைமை நாடுகளுக்கிடையில் போர்நிறுத்தம் தொடர்பான வேறுபட்ட கருத்துக்கள் இருப்பதாகவும் அவர் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply