வடகொரியா – அமெரிக்கா அதிபர்கள் சந்தித்துப் பேசும் தேதி, இடம் முடிவானது

பரம விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா – வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது.இதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இந்த சந்திப்பு நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை முடிவு செய்யப்படாமல் இருந்தது.

வடகொரியா- தென்கொரியா அதிபர்கள் சந்தித்துப் பேசிய பன்முன்ஜோம் எல்லைப்பகுதியில் உள்ள ‘பீஸ் ஹவுஸ்’ என்ற கட்டிடத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்-னை சந்தித்துப் பேச டிரம்ப் சமீபத்தில் விருப்பம் தெரிவித்து இருந்தார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்த பதிவில், ‘இந்த சந்திப்புக்காக பல்வேறு நாடுகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. ஆனால், வடகொரியா- தென்கொரியா அதிபர்கள் சந்தித்துப் பேசிய எல்லைப்பகுதியில் சந்தித்துப் பேசினால், மூன்றாவது நாட்டில் நடப்பதைவிட இந்த சந்திப்பு முக்கியமானதாகவும், பொருத்தமாகவும் அமையும் அல்லவா? என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்-னை சந்தித்துப் பேசப்போகும் தேதியும், இடமும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று தெரிவித்துள்ளார்.

டெக்சாஸ் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்ய புறப்படுவதற்கு முன்னதாக வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிரம்ப், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். அந்த நற்செய்திக்காக காத்திருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply