இலங்கையில் உடனடி யுத்த நிறுத்தம்: தமிழக சட்ட சபையில் இன்று தீர்மானம்

இலங்கையில் உடனடியாக ஒரு போர்நிறுத்தம் ஏற்படுத்தப்படுவதற்கு இந்திய மத்திய அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும் என தமிழ்நாடு சட்டசபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
தமிழக முதலமைச்சர் கருணாநிதி இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து சட்டசபையில் ஆற்றிய உரையை அடுத்து, பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டை வெளியிட்டு இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

எனினும், தமிழக முதல்வர் தமதுரையில் விடுதலைப் புலிகளைக் குறிப்பிட்டு எதனையும் பேசவில்லை என்பது தமிழ்நாட்டு அரசியல் அவதானிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒருதரப்பு போர்நிறுத்தத்துக்குத் தயார் என்று அறிவித்துள்ள நிலையில், இலங்கை அரசம் அதனை ஏற்றுக்கொண்டு போர்நிறுத்தம் செய்யவேண்டும் என்று தமதுரையில் கவனமாக விடுதலைப் புலிகள் என்ற பெயரைப் பயன்படுத்துவதை கலைஞர் கருணாநிதி தவிர்த்துள்ளார்.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் இரண்டாண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்காத வகையில், அதேசமயம் தமிழக அரசியல் நிலைமைகளை நாடி பிடித்துப் பார்த்து தமிழக முதல்வர் தமது தீர்மானம் மீதான உரையை ஆற்றியுள்ளார்.

இலங்கைக்கு வழங்கிய ராடார்களைத் திரும்பப் பெறவேண்டும், இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகளை வழங்கக் கூடாது, கடன் வழங்கக் கூடாது என்பதுபோன்ற தீர்மானங்கள் ம.தி.மு.க. சார்பாக முன்வைக்கப்பட்டபோதும், அவை இறுதித் தீர்மானத்தில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

அதேபோல், உலக அளவில் பெரும் மதிப்புப் பெற்ற தமிழ் தலைவர்கள் பலரும் இல்லாமல் போனதே இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினைகள் பற்றி உலகின் கவனத்தை ஈர்க்க முடியாமல் போனமைக்கு முக்கிய காரணம் என்ற கருத்தை வெளியிட்ட தமிழக காங்கிரஸ், போர்நிறுத்தம் குறித்துப் பேசும்போது, ஏன் போர் ஏற்பட்டது என்பதை அதற்குக் காரணமானவர்கள் புரிந்துகொள்ளுமாறு செய்யவேண்டிய பொறுப்பும் இருக்கிறது என்பதை வலியுறுத்தியது.

வங்காள விரிகுடா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றிருக்கும் நிலையில், தமிழக சட்டசபையில் இவ்வாறான ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

நாளையதினம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை ஜனாதிபதியைச் சந்திக்கவிருப்பதால், தமிழக சட்டசபையின் இந்தத் தீர்மானம் அவர்களுடைய பேச்சுவார்த்தையில் தாக்கம் செலுத்தலாம் என்று இந்திய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply