காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணி முடிந்தது: என்றாவது ஒரு நாள் கிடைக்கும் என ஆஸி. நம்பிக்கை
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணியின் 2-ம் கட்ட முயற்சி நேற்றுடன் முடிந்த நிலையில், அந்த விமானத்தை என்றாவது ஒரு நாள் கண்டுபிடிக்க முடியும் என ஆஸ்திரேலியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மலேசியன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான எம்.எச்-370 விமானம், கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு புறப்பட்டது. 239 பயணிகளுடன் புறப்பட்ட அந்த விமானம் திடீரென மாயமானது.
இதையடுத்து, மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகளின் அரசுகள் கூட்டாக இணைந்து விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டன. இந்திய பெருங்கடல் பகுதியிலிருந்து விமானத்தின் இறக்கைகள் கைப்பற்றப்பட்டன. எனினும் விமானத்தைக் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, காணாமல் போன கப்பல்கள், விமானங்களைக் கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்ற ‘ஓஷன் இன்பினிட்டி’ என்ற அமெரிக்க தனியார் நிறுவனத்துடன் கடந்த ஜனவரி மாதம் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, விமானத்தைக் கண்டறிந்தால், அந்நிறுவனத்துக்கு மலேசிய அரசு ரூ.478 கோடி வழங்க வேண்டும். தேடுவதற்கான கால வரம்பு 90 நாட்களாக நிர்ணயிக்கப்பட்ட போதிலும், 2 முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டது.
இதன்படி 2-வது முறையாக தொடங்கிய தேடும் பணி, கடந்த 5 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில், 96 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தேடியும் அந்த விமானத்தைக் கண்டறிய முடியவில்லை என்றும் ஒரு வாரத்தில் தேடும் பணி நிறுத்தப்படும் என்றும் மலேசிய அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதன்படி தேடும் பணி நேற்று முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய போக்குவரத்து அமைச்சர் மைக்கேல் மெக்கார்மாக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமானத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நீண்டகாலமாக (4 ஆண்டுகள்) எம்எச் 370 விமானத்தைத் தேடினோம். நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய போதிலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேநேரம் என்றாவது ஒரு நாள் இந்த விமானத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று நம்புகிறோம்” என கூறப்பட்டுள்ளது.
இதுபோல இது தொடர்பான விசாரணையை மறு ஆய்வு செய்வோம் என்றும் 3-வது கட்ட தேடும் பணி தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply