இப்தார் விருந்தளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: பல முஸ்லிம் நாட்டு தூதர்கள் பங்கேற்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்தளித்தார். இதில் பல முஸ்லிம் நாட்டு தூதர்கள் பங்கேற்றனர்.ஆண்டுதோறும் முஸ்லிம்கள் கொண்டாடும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் இப்தார் விருந்தளிப்பது வழக்கம். ஆனால், அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் அவர் இப்தார் விருந்தளிக்கவில்லை. அதிபர் தேர்தலின்போதே முஸ்லிம்களுக்கு எதிராக ட்ரம்ப் பேசி வந்தார்.

அதிபரான பின்னர் ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன் ஆகிய 5 முஸ்லிம் நாட்டினர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு தடை விதித்தார். அத்துடன் முஸ்லிம்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தார். இந்த பின்னணியில் கடந்த ஆண்டு அவர் இப்தார் விருந்தளிக்கவில்லை.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் அதிபர் ட்ரம்ப் இப்தார் விருந்தளித்தார். இதனால் பலரும் ஆச்சரியம் அடைந்தனர். இந்த விருந்தில் சவுதி தூதர் இளவரசர் காலித் பென் சல்மான், ஜோர்டான் தூதர் டினா கவார், இந்தோனேசிய தூதர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மேலும், ஐக்கிய அரசு எமீரகம், எகிப்து, துனிசியா, கத்தார், பக்ரைன், மொராக்கோ, அல்ஜீரியா, லிபியா, குவைத், காம்பியா, எத்தியோப்பியா, இராக், போஸ்னியா நாட்டு தூதர்களும் விருந்தில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் பேசும்போது, ‘‘இங்கு வந்துள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மை யாக உள்ள நாடுகளின் தூதுவர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்தில் பங்கேற்று எங்களைக் கவுரப்படுத்தி இருக்கிறீர்கள். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இங்குள்ள ஒவ்வொருவருக்கும் உலகில் உள்ள முஸ்லிம்களுக்கும் ரமதான் முபாரக். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றினால் மட்டுமே எல்லோருக்கும் பாதுகாப்பு, வளர்ச்சியை நாம் அடைய முடியும்’’ என்று தெரிவித்தார். இதற்கிடையில் அதிபர் ட்ரம்ப்பின் இப்தார் விருந்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சில முஸ்லிம் அமைப்பினர் வெள்ளை மாளிகைக்கு வெளியில் தனித்தனியாக இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply