முஷரப், தேர்தலில் போட்டியிட அளித்த அனுமதி வாபஸ் – பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் சிகிச்சை பெறுவதற்காக செல்வதாக கூறி துபாய் போனார். ஆனால் அவர் அங்கு இருந்து இன்னும் திரும்பவில்லை. ஆனால் அவர் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பினார். அவர் சிட்ரால் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு, நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கியது.
அந்த நிபந்தனையின்படி அவர் தன்மீது உள்ள வழக்கு விசாரணையை எதிர்கொள்வதற்கு லாகூர் கோர்ட்டில் கடந்த 13-ந் தேதி ஆஜராக தவறினார்.
இதற்கு இடையே தன் மீதான தகுதி நீக்க வழக்கில் பெஷாவர் ஐகோர்ட்டு 2013-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் தலைமையிலான அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நேற்று 2 மணிக்குள் அவர் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக நீதிபதிகள் கெடு விதித்தனர். ஆனால் அதன்படி அவர் ஆஜராகவில்லை.
ஆனால் அவரது வக்கீல் கமர் அப்சல், முஷரப் நாடு திரும்ப கூடுதல் அவகாசம் கோரினார். அதைத் தொடர்ந்து அந்த வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
அதே நேரம் முஷரப், சிட்ரால் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு அளித்த அனுமதியை நீதிபதிகள் அதிரடியாக திரும்பப் பெற்றனர். இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முஷரப்பின் கனவு பலிக்காமல் போய் விடும் சூழல் உருவாகி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply