நினைவில் பதிந்த சுவடுகள்

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தனது முதலாவது தலை முறைத் தலைமைகளை தெற்கின் இன வெறிக்கு இரை கொடுத்தது. ரெலோ தனது இரண்டாவது தலை முறைத் தலைமையையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் வடக்கின் பயங்கரவாதத்திற்கு காவு கொடுத்தது. இன்று, எமது மனங்களில் என்றும் அழியாத சிறீயண்ணாவையும் மற்றும் போராளிகளையும் புலிகளின் பாசிச அரசியலில் முதற்காலடி நர வேட்டை ஆடிய இருபத்தி மூன்றாம் வருட நினைவேந்தும் நாள்.

1986 ஏப்ரல் 26ல் புலிகள் ரெலோ மீது பிரகடனப்படுத்தப்படாத யுத்தமொன்றை தொடுத்தார்கள். பத்து நாட்கள் நீடித்த பாசிசத்தின் முதற் பயிற்சிப் பட்டறை நூற்றுக்கணக்கான ரெலோ போராளிகளையும் சில பொது மக்களையும் பலியெடுத்து, மே 6ம் நாள் எமது தலைவர் சிறீ சபாரட்னம் கொலையுடன் முடிவுக்கு வந்தது.

`83 நெடுங்குருதிக்கு பின்னான சூழலின் போது அறுபதுக்கு மேற்பட்ட போராட்ட அமைப்புகளில் பஞ்ச பாண்டவர்கள் போல் ஐந்து இயக்கங்கள் தான் முன்னணியில் நின்றன. ரெலோ மீது புலிகள் தாக்குதல் தொடங்கிய போது ஏனைய அமைப்புகள் காத்திரமான எதிர் நடவடிக்கை எடுத்திருந்தால் புலிகளின் ஏக தலைமைத்துவ கனவை ஆரம்பத்திலேயே கலைத்திருக்க முடியும். தமிழ் மக்களின் அரசியல் உரிமை போராட்டமும் ஏறு முகத்தை எட்டியிருக்கும்.

இராணுவ ரீதியாக புலிகளால் கட்டமைக்கப்பட்ட ஏக தலைமைத்துவம் அரசியல் அங்கீகாரம் இன்றி கடந்த 2004 பாராளுமன்ற பொதுத் தேர்தல் வரை இருந்தது. பன்முக அடையாளத்துடன் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த பல்வேறு அரசியல் கட்சிகளை `அடித்துப் பழுக்க வைத்து` புலிகளின் ஏக தலைமைக்கு அரசியல் அங்கீகாரம் பெற்றுக் கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ரெலோவின் ஒரு பகுதியினர் புலிகளை ஆதரிக்கும் கூட்டமைப்பின் பொதுப்போக்கில் தம்மையும் இணைத்துக் கொண்டதால் ரெலோ உறுப்பினர்களான நாம் எம்மை சிறீ-ரெலோ எனப் பிரகடனப்படுத்த வேண்டியாற்று.

தெற்கின் இனவெறியால் பிள்ளையார் சுழி போடப்பட்ட வடக்கின் பயங்கரவாதம் இலங்கைக் தீவில் மூன்று தசாப்தங்களாக முன்னூறு ஆயிரம் மனிதர்களின் மூச்சை நிறுத்தியுள்ளது. சமாதானம், சனநாயகம், சகவாழ்வு எனும் அரசியல் அடித்தளமின்றி இனங்களுக்கிடையில் ஐக்கியமும் இலங்கையின் ஒருமைப்பாடும் சாத்தியமற்றது. புலிகள் இராணுவ ரீதியாக மட்டும் அல்ல அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்பட வேண்டுமெனின் இலங்கையில் அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுக்கான முன்மொழிவுகள் குறித்து பொது விவாதம் அவசியமாகும்.

மறைந்த எமது தலைவர் சிறீ சபாரட்னம் ஏனைய போராளிகள் மற்றும் பொது மக்கள் அனைவரையும் நினைவேந்தும் இந்நாளில் அரசியல் வேறுபாடுகளை சற்று ஒதுக்கி வன்னியில் யுத்தத்தால் இடம் பெயர்ந்த மக்களுக்கு பொதுப் பணியாற்ற முன்வருமாறு அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றோம்.

(இவ்வருட வீரமைந்தர் தினத்தை வரும் சனிக்கிழமை 2009, மே. 9ம் திகதி Lindenhaus, lden str.29, 2540 Grenchen, Switzerland இல் நினைவேந்த உள்ளோம். அந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொண்டு முன்னனுமதி பெறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். சுவிஸ் : 00 41 789051095, ஜேர்மனி : 00 49 17668543814)

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply