அமெரிக்காவிடம் அடைக்கலம் கேட்கும் 7400 இந்தியர்கள் : ஐ.நா. அறிக்கை

போர்கள், வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக பொதுமக்கள் தங்கள் நாடுகளை விட்டு இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில், உலகின் பலவேறு நாடுகளில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ள அகதிகள் தொடர்பாக ஐ.நா. அகதிகள் முகமை சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த ஆண்டு (2017) இறுதி நிலவரப்படி மொத்தம் 68.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு மட்டும் 16.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இடம்பெயர்ந்து சென்றவர்களில் அமெரிக்காவிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்த அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 168 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதில் சால்வடோர் நாட்டைச் சேர்ந்தவர்கள் முதலிடத்தில் உள்ளனர். இந்த நாட்டைச் சேர்ந்த 49500 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்து சென்றவர்களில் கடந்த ஆண்டு மட்டும் 7400 பேர் அமெரிக்க அரசிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த ஆண்டு நிலவரப்படி மொத்தம் 197,146 அகதிகள் உள்ளனர். அவர்களில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ள 10519 பேரின் விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கின்றன. இந்தியாவில் இருந்து சென்றவர்களில் 40391 பேர் பல்வேறு நாடுகளில் அடைக்கலம் கோரி உள்ளனர் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply