அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய விசேட குழுவொன்றை ஜனாதிபதி நியமிப்பு
தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் அலரிமாளிகையில் நேற்று (மே. 5) மாலை சந்தித்த ஜனாதிபதி, தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.
நேற்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொள்ளாத போதும், ஈபிடிபியின் சார்பில் சமூக சேவைகள் அமைச்சரும் கட்சியின் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சந்திரகுமார், சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அதன் உப தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன், புளொட் சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் அதன் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன், ஈபிஆர்எல்எப் (பத்மநாபா) சார்பாக அதன் செயலாளர் சிறிதரன், மலையக மக்கள் முன்னணி சார்பில் பிரதி அமைச்சர் ராதாகிருஷ்ணன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் ஆகியோருடன் அமைச்சர்களான மகிந்த விஜேசேகர பேராசிரியர் விஸ்வ வர்ணபால டியு குணசேகர மற்றும் சமாதான செயலக பணிப்பாளர் கலாநிதி ரஜீவ விஜேசிங்க அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திவாரட்ண வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன ஆகியோரும் பங்குகொண்டனர்.
வடபகுதியிலுள்ள தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை இந்த விசேட குழு கவனத்தில் எடுத்து அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்தும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட குழு வாரத்தில் ஒருதடவை கூடும் எனவும், அரசாங்க சமாதானச் செயலகம் இதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ள இந்த குழு வாரத்திற்கொரு முறை கூடவுள்ளதுடன் அந்த குழு தொடர்பான இணைப்பு நடவடிக்கைகளை சமாதான செயலகம் மேற்கொள்ளவுள்ளது. இணைப்பாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ விளங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாராவாரம் நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செல்லவுள்ள உயர்மட்டக்குழு தமது கருத்துக்களையும் சிபார்சுகளையும் ஜனாதிபதியிடம் நேரடியாக சமர்ப்பித்து பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்பது மற்றுமோர் முக்கிய விடயமாகும்.
தமிழ்க் தேசியக் கூட்டமைப்பு இச்சந்திப்பில் கலந்துகொள்ளாமல் உதாசீனம் செய்துள்ளமை கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது. வழமைபோலவே தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுகளில் அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதையே இது எடுத்துக் காட்டுவது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. கூட்டமைப்பு விரும்புவது போலவே யுத்த நிறுத்த கோரிக்கையினை வலியுறுத்த வேண்டுமென்றாலும் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டு தமது கோரிக்கையினை முன்வைத்திருக்க முடியும். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல புலிகளினால் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களின் நிலை பற்றியும் வலியுறுத்தியிருக்கலாம் என ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply