நினைவழியா நெருப்பு நாள்!

அந்த நெருப்பு நாள் நேற்றுப்போல் இருக்கிறது.

ஆனாலும் வடுக்கள் நிறைந்த அந்த நாட்கள் இருபத்தி மூன்று ஆண்டுகளை கடந்து இன்னமும் எம் மனங்களில் தீராத் துயரங்களாகவும் வாரலாற்றுத் துரோகத்தின் ஞாபகங்களாகவும் எரிந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தம்மையும் இணைத்துக் கொண்டு தியாக வேள்வியில் இறங்கியிருந்த தேசத்தின் புதல்வர்களாகிய ரெலோ இயக்கப் போராளிகளை தமிழின விரோதப் பாசிசப் புலிகள் தெருத்தெருவாக உயிரோடு தீயிட்டு கொழுத்திய நாட்களை எப்படி மறப்பது?

ஒரு சுதந்திரப்போராட்டத்தையே வழி நடத்தி சென்றவர்களில் ஒருவரான தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களை இவிரக்கமின்றி அழித்தொழித்த கொடிய நிகழ்வுகளை எமது தேச வரலாற்றில் இருந்து அழித்து விடமுடியுமா?

நேற்று விதைத்தது இன்று அறுவடைக்கு வருவது போல் அன்று விதைத்த வரலாற்றுத் துரோகங்களுக்கான அறுவடையை புலித்தலமை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் சிறுகச் சிறுக புலித்தலைமை செய்து முடித்த வரலாற்றுத் துரோகங்களின் மொத்த வடிவங்கள் யாவும் ஒன்று திரண்டு எமது மக்களை இன்று நடுத்தெருவிற்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

ஓன்று பட்டு உரிமை கேட்டு களத்தில் நின்ற சகோதர இயக்க போராளிகளையும் அதன் தலைவர்களையும் கொன்று குவித்த புலித்தலமை தமிழ் பேசும் மக்களின் பலத்தை அடித்து நெருக்கியது.

தாம் மட்டும் தனித்து நின்று போராடுவோம் என்று தனித்தலைமை வெறி பிடித்து சக விடுதலை அமைப்புகளின் போராடும் சுதந்திரத்தை பறித்து தமது கையில் பலாத்காரமாக எடுத்துக்கொண்ட புலித்தலைமை இன்று தமிழ் பேசும் மக்களுக்கு தந்த மிச்சம் என்ன?

சொந்த நிலமிழந்து குடியிருந்த வீடிழந்து உறவுகளை பிரிந்து உடமைகளை இழந்து பலி கொடுக்கப்பட்ட உயிர்கள் போக மீதி மக்கள் இன்று நடுத்தெருவிலும் நலன்புரி நிலையங்களிலும் வாழ்க்கையை தொலைத்து விட்டிருக்கும் துயரங்களே எஞ்சியிருக்கின்றன.

மனித குலத்தின் நாகரீக முகங்களுக்கு முன்பாக தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்கள் புலித்தலமையால் அழித்தொழிக்கப்பட்டமை புலித் தலைமை தமக்கான புதை குழியை தாமே தோண்டி விட்ட நிகழ்வாகும். ஏனைய விடுதலை அமைப்புகளின் தலைவர்களையும் போராளிகளையும் அழித்தொழித்ததன் மூலம் தமக்கான படுகுழியை மேலும் ஆழப்படுத்தி இருபத்தி மூன்று ஆண்டுகள் கழிந்து அந்த புதை குழியில் இன்று தாமாகவே வீழ்ந்து கொண்டிருக்கிறது.

சக இயக்க தலைவர்கள், மற்றும் போராளிகளை புலித்தலமை அழித்தொழித்த போது இறகின் இழப்பை விடவும் இலேசான இழப்பென கருதி மௌனம் சாதித்து அதற்கு நியாயம் கற்பித்தவர்கள் அந்த இழப்பின் வலிகள் மாமலைகளை தகர்த்ததற்கு ஒப்பானது என்று சிந்திக்க வேண்டிய தருணம் இப்போது தோன்றிருக்கின்றது.

எது எவ்வாறெனினும் புலித் தலைமையால் என்றோ கைவிடப்பட்டு இன்று நடுத் தெருவிற்கு கொண்டு வரப்பட்டிருக்கும் எமது மக்களின் நீடித்த மகிழ்ச்சிக்காகவும், நிரந்த விடிவிற்காகவும் நடை முறைச்சாத்தியமான வழி முறையில் அனைத்து ஐனநாயக மற்றும் மனித நேய சக்திகளும் ஒன்று பட்டு உழைக்க வேண்டும்.

இதுவே மக்களின் எதிரிகளால் கொன்றொழிக்கப்பட்ட தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களுக்கும் ரெலோ இயக்க தோழர்களுக்கும் நாம் செலுத்தும் மரியாதை ஆகும்

அழித்தொழிக்க வந்தவர்களே அழியுங்கள்! அழியுங்கள்!
ஆனாலும் கொலையுண்ட தலைவரினதும் போராளிகளினதும்
குருதிச்சுவடுகளை உங்களால் அழித்து விட முடியாது

அவர்கள் சிந்திய குருதிச்சுவடுகள்
நூற்றாண்டு கடந்தும் உங்கள் கொலைக்கரங்களின்
நாற்றத்தை பரப்பிக்கொண்டிருக்கும்

– ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி ( 06/05/2009)

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply