அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் முறையீடு

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. 

ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்யப்பட்டதாகும்.

இதற்கிடையே, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த மே மாதம் அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்தார். மேலும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை வரும் நவம்பர் மாதத்துடன் முழுவதுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்நிலையில், அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிய பிறகு ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பல்வேறு பொருளாதார தடைகளை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ஈரான் வெளியுறவு மந்திரி முகமது ஜாவித் ஜரிப், ’ஈரானுடனான உறவு மற்றும் சட்டபூர்வமான கடமைகளை அமெரிக்கா அவமதித்துவிட்டது. இவ்விவகாரத்தை நாங்கள் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள உள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்படும் என சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனினும், எந்த தேதியில் இருந்து விசாரணை தொடங்கும் என்பதை தெரிவிக்கவில்லை.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply