கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் வழிப்படுத்தும் குழு கூட்டம் இன்று
வறுமையை ஒழித்துக்கட்டுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில், ஜனாதிபதி அலுவலகத்தின் முக்கிய நிகழ்ச்சி திட்டமாக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் சப்ரகமுவ மாகாண வழிப்படுத்தும் குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.
இரத்தினபுரி மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று (25) பிற்பகல் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் மாகாணத்தில் உள்ள அரசியல் முக்கியஸ்தர்கள், அரசாங்க அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெறும்.
இந்தக் கூட்டத்தில் கிராமசக்தி மக்கள் இயக்கம் சப்ரகமுவ மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விதம் மற்றும் அதன் முன்னேற்றம் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக கவனம் செலுத்தப்படவுள்ளது.
மேலும் பிரதேச மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி அவற்றை தீர்ப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.
தங்கிவாழும் மனநிலையிலிருந்து விடுபட்டு மக்கள் சுய முயற்சியில் எழுந்திருப்பதற்கான வழிகாட்டலையும் உதவியையும் வழங்கும் திட்டம் என்ற வகையில் இதுவரை நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த வறுமை ஒழிப்பு மக்கள் இயக்கங்களில் இருந்து கிராமசக்தி இயக்கம் வேறுபட்டு விளங்குகிறது.
சப்ரகமுவ மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதார வழிகளை அபிவிருத்தி செய்வதற்காக கிராமசக்தி இயக்கத்தின் ஊடாக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நடைபெறவுள்ள சப்ரகமுவ மாகாண வழிப்படுத்தும் குழு கூட்டத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட செயலாளர்களுக்கு கிராமசக்தி மக்கள் சங்கங்களுக்காக வழங்கப்படவுள்ள முதலாவது தவணைக்கான ஏற்பாடுகள் ஜனாதிபதியினால் வழங்கப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கிராமசக்தி மக்கள் இயக்கம் நடைமுறைப்படுத்தப்படும் கனேகம உற்பத்தி கிராமத்தை பார்வையிடவுள்ளதுடன், அம்மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கண்டறியவுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply