காவேரி மருத்துவமனைக்கு முதல்வர், துணை முதல்வர் வருகை – கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தனர்

திமுக தலைவர் கருணாநிதி (வயது 94), வயோதிகம் சார்ந்த உடல் உபாதைகள் காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி கோபாலபுரம் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். வீட்டிலேயே அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஐசியு வார்டில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். பல்வேறு அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்த வண்ணம் உள்ளனர்.

அவ்வகையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு வந்தார். கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு சென்று நேரில் பார்த்தார். பின்னர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தார். மேலும், கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். இதேபோல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், காமராஜ், சி.வி.சண்முகம் ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்து உடல்நலம் விசாரித்தனர்.

பின்னர் வெளியே வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களை சந்தித்தார். அப்போது, திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு நேரில் சென்று பார்த்ததாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.

நேற்று இரவு கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டு, பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன்பின்னர் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மருத்துவனையில் இருந்து வெளியேறினர். இதனால் காவேரி மருத்துவமனை அருகில் குவிந்திருந்த தொண்டர்களிடையே அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply