மாநகர போலீஸ் கமிஷ்னர் தலைமையிலான ஆலோசனை நிறைவு – காவேரி மருத்துவமனை முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு
திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கடந்த 10 நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களாக முன்னேறி வந்த அவரது உடல்நிலையில் இன்று சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. _
இது தொடர்பாக இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள 6-வது அறிக்கையில், கருணாநிதியின் வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில், போலீஸ் அதிகாரிகளுடன் மாநகர போலீஸ் கமிஷ்னர் விஸ்வநாதன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடத்திய ஆலோசனை நிறைவடைந்தது.
இதில், பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கமிஷ்னரருடனான ஆலோசனைக்கு பிறகு காவல்துறை அதிகாரிகள் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர்.
இதற்கிடையே, காவேரி மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தெரிந்துகொள்ள மருத்துவமனைக்கு வரும் தொண்டர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ‘எழுந்து வா தலைவா’ என அவர்கள் உணர்ச்சி பெருக்குடன் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
மேலும், அதிகப்படியான தொண்டர்கள் குவிந்துள்ளதால், அவர்கள் கட்டுப்பாட்டை இழந்திடாமல் இருக்கும் வகையில் காவேரி மருத்துவமனை முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply