ஐக்கிய தேசிய கட்சிக்குள் இனவாத செயற்பாடுகளுக்கு இடமில்லை : இம்ரான் எம்.பி
ஐக்கிய தேசிய கட்சிக்குள் இனவாத செயற்பாடுகளுக்கு இடமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.அண்மையில் ஐக்கிய தேசிய கட்சி தவிசாளர் ஒருவர் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் கபீர் ஹாசிமினால் பிரதமரிடம் முறையிடப்பட்டது. பின்னர் அங்கிருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினோம். அதனடிப்படையில் அந்த தவிசாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சிக்குள் இனவாத செயற்பாடுகளுக்கு இடமில்லை. அவ்வாறான செயற்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். ஐக்கிய தேசிய கட்சி என்பது நாட்டில் உள்ள ஒரு இனத்துக்கு மட்டும் சொந்தமான கட்சியல்ல.
இவ்வாறான பல சம்பவங்கள் கடந்த ஆட்சியில் நடைபெற்றுள்ளன அவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக எப்பொழுதாவது நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா? பொதுஜன பெரமுன ஆட்சி செய்யும் சில சபைகளில் மாட்டு இறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. அந்த கட்சி தெளிவான இனவாத செயற்பாடுகளை முன்னெடுக்கிறது என்பதுக்கு இதுவே உதாரணம். ஆனால் ஊடகங்களுக்கு இது இனவாத செயலாக தென்படுவதில்லை. அதை அவர்கள் மக்களுக்கு தெளிவு படுத்தவும் நடவடிக்கை எடுப்பதில்லை. உள்ளூராட்சி சபைகளில் ஆட்சிக்கு வந்ததற்கே மாட்டிறைச்சியை தடை செய்த அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நடைபெறும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply