இந்தியாவில் இருந்து பஞ்சாபை பிரிக்க சீக்கிய பிரிவினைவாதிகள் லண்டனில் போராட்டம்

பஞ்சாப் தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரிட்டன் நாட்டில் உள்ள பல சீக்கிய அமைப்புகள் இன்று லண்டனில் பெரும் பேரணி நடத்தின. ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ (Sikhs For Justice) என்ற சீக்கிய அமைப்புகளின் கூட்டணி சார்பில் லண்டன் நகரில் உள்ள டிராஃபால்கர் சதுக்கத்தில் இந்த பேரணி நடைபெற்றது.இந்த பேரணியில் பஞ்சாப் தனி நாடாக உருவாவது குறித்து வரும் 2020-ம் ஆண்டுக்குள் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த பேரணி குறித்து ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ அமைப்பின் சட்ட ஆலோசகரான குர்பத்வந்த் சிங் பனுன் செய்தியாளர்களிடம் பேசுகையில் ‘‘சுதந்திர பஞ்சாப் 2020ம் ஆண்டு வாக்கெடுப்புக்கான லண்டன் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது’’.

‘‘வரலாற்றில் முன்பு இருந்தது போல் பஞ்சாப் மீண்டும் தனி நாடாக உருவாக்கப்படும் என்பதை உலக நாடுகளுக்கு அறிவிக்க அந்த தீர்மானம் ஐ.நா. சபையில் சமர்ப்பிக்கப்படும்’’ எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த, பேரணியில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த பேரணி குறித்து இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்க பிரிவினைவாதிகளின் சதி வேலை இது என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களிலும் இந்த பேரணிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க சில வெளிநாட்டு அமைப்புகளின் சதியே இந்த பேரணி என சீக்கியர்கள் உட்பட பலர் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அமரிந்தர் சிங் கூறுகையில், ’இந்தியாவில் பிரிவினை வாதத்தை தூண்டி பிரச்சனையை ஏற்படுத்தும் நோக்கில் பாகிஸ்தானில் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தூண்டுதலின் பேரில் லண்டனில் காலிஸ்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறான செயல்களின் மூலம் இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க அவர்கள் முயன்றார்கள் எனில் நிட்சயம் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்’ என தெரிவித்துள்ளார்.

சிரோன்மனி அகாலிதள மூத்த தலைவர் என்.குஜ்ரால் கூறுகையில், காஷ்மீரில் தோல்வியை தழுவிய ஐஎஸ்ஐ பஞ்சாபை பகடைகாயாக்கி குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. பிரிட்டனில் குடியேறிவிட்ட மிக சொற்பமான சீக்கியர்களே காலிஸ்தான் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

அவர்களுக்கு ஐஎஸ்ஐ நிதியுதவி செய்கிறது, மற்ற சமூகங்களை காட்டிலும் சீக்கியர்கள் இந்தியாவிற்கு அதிக தியாகங்களை செய்துள்ளனர். சீக்கியர்கள் அனைவரும் ஒருங்கினைந்த இந்தியாவையே விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், லண்டனில் உள்ள இந்தியர்கள் பெரும்பாலானர்வர்கள் இந்த பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கினைந்த இந்தியாவிற்கு ஆதரவான போட்டிப் பேரணியை லண்டன் நகரில் இன்று நடத்தினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply