காஷ்மீர் உள்பட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்தியாவுடன் தீர்வு காண விரும்புகிறோம் – பாக். வெளியுறவு மந்திரி
_பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டின் வெளியுறவு கொள்கைகள் குறித்து வெளியுறவுத் துறை மந்திரி ஷா முகமது குரேஷியுடன் நேற்று அலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த குரேஷி, காஷ்மீர் விவகாரம் உள்பட அனைத்து பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் இந்தியாவுடன் தீர்வு காண விரும்புவதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக குரேஷி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :- __
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சமாதான பேச்சுவார்த்தைகள் தடைபட்டுள்ளது என்பதில் ரகசியம் ஏதும் இல்லை, இருந்தாலும் அடுத்த கட்டத்திற்கு நகர்வது எப்படி என்று பார்க்க வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் சுமூக தீர்வு காண்பது உள்பட இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் விரும்புகிறது.
எங்களை நோக்கி இந்தியா ஒரு அடி முன்னோக்கி நகர்ந்தால், நாங்கள் இரு அடிகள் முன்னோக்கி வருவோம் என பிரதமர் இம்ரான் கான் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். எனவே, இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளில் பல்வேறு முட்டுக்கட்டைகள் இருந்தாலும் மீண்டும் பேசுவார்த்தையை தொடங்க பாகிஸ்தான் அரசு வெட்கப்படவில்லை.
இதன் மூலமாக இந்தியா – பாகிஸ்தான் உறவில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதை பற்றி நான் பேசவில்லை, முன்னேற்றம் ஏற்படுகிறதா ? இல்லையா? என்பதை பற்றி யோசிக்காமல் முதலில் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று தான் கூறுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற பதன்கோட் விமானப்படை தள தாக்குதல், உள்பட பல்வேறு தாக்குதல்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியும், அவர்களுக்கு எதிராக இந்தியா ஆதாரங்கள் வழங்கியும், பயங்கரவாதிகள் மீது அந்த நாடு நடவடிக்கை எடுக்காததால், இரு நாடுகள் இடையே நடைபெற்று வந்த அமைதி பேச்சுவார்த்தையை கடந்த 2016-ம் ஆண்டு இந்தியா நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply