பொதுக் கொள்கையின் கீழ் மட்டுமே அனைவரும் ஒர் அணியாக செயற்படமுடியும் : சுரேஸ் பிரேமசந்திரன்
எல்லோரும் வெவ்வேறு சிந்தனைகளை கொண்டிருந்தாலும் பொதுக்கொள்கையின் கீழ் இணைய முன்வருவார்கள் எனில் அனைவரையும் இணைத்துக்கொண்டு ஒரு அணியாக செயற்படமுடியும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர்சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஈ.பி.ஆர்.எல்.எப்பில் அங்கம் வகித்த பலர் இன்று வெவ்வேறு கட்சிகளாக, அமைப்புகளாகப் பிரிந்து நிற்கின்றனர். ஆனால் எல்லோருமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் போக்குக்கு எதிரானவர்களாய் உள்ளனர். அந்தவகையில் அவர்கள் எல்லோரும் ஓரணியில் இணைந்து மாற்று அரசியல் பாதையொன்றை அமைக்கும் சாத்தியக்கூறு உள்ளதா?
அதில் எங்களுக்கு எந்தவிதமான கருத்துவேறுபாடும் கிடையாது. ஆனால் அவ்வாறு பிரிந்துசென்றவர்கள் இன்ற நேற்றல்ல மிக நீண்ட காலமாக வேறு வேறு பாதைகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
உதாரணத்துக்கு ஈ.பி.டி.பி. டக்ளஸ் தேவானந்தாவை எடுத்துக்கொண்டால், முன்னைய ஆட்சிக் காலங்களிலும் அதன் பின்னரும் தான் அமைச்சராக இருக்க வேண்டும். அவ்வாறு அமைச்சராக இருந்தால்தான் மக்களுக்கு சேவை செய்யலாம் என்று எண்ணுபவர். தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் அவர்களிடத்தில் எந்தவொரு வேலைத்திட்டமும் இல்லை.
ஆனால் தமிழ் மக்களுக்கு குறைந்தது ஒரு சமஷ்டி அமைப்பு முறைமையேனும் வேண்டுமென்று நாங்கள் கேட்கின்றோம். ஏனையோருக்கும் வெவ்வேறு சிந்தனைகள் இருக்கலாம். எனவே இங்கு ஒரு பொதுவான கொள்கையை ஏற்படுத்தி அதன்பால் இவர்கள் எல்லோரும் உறுதியாக இருந்து ஒன்றுபடுவார்களாயின், எதற்காக இக்கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டனவோ, தமிழ் மக்களது குறைந்தபட்ச உரிமைகளை வென்று, வட கிழக்கில் அவர்கள் கௌரவமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தக் கூடிய வகையிலான கொள்கைகளை அவர்கள் வகுப்பார்களாயின், அவ்வாறான கொள்கையின் அடிப்படையில் சிலவேளைகளில் நாங்கள் ஒன்றுபடலாம். ஆனால் இன்று வரையில் அவ்வாறானதொரு கொள்கையை எவரும் வெளிப்படுத்தவில்லை.
அதுமாத்திரமல்ல அவர்கள் நீண்டகாலமாக, வெவ்வேறு பாதைகளில் பயணிப்பவர்கள். எனவே அவ்வாறான இணைவை விரும்புபவர்கள் இவையெல்லாவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறான கொள்கை ரீதியான இணக்கப்பாடில்லாமல் எனக்கு மாத்திரமல்ல ஏனையவர்களுக்கும் அது கடினமானதாகவே இருக்கும். வெறுமனே ஈ.பி.ஆர்.எல்.எப் மீள இணைவது என்றில்லாமல் அவ்விணைவானது அர்த்தபூர்வமாய் அமைய வேண்டும்.
ஏனெனில் ஈ.பி.ஆர்.எல்.எப்பில் இருந்தவர்கள் தற்போது, வெவ்வேறு திசைகளில் பயணிக்கின்றார்கள். ஒரு காலத்தில் நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தோம் தற்போது அவ்வாறான சூழல் இல்லை. ஒன்றாக இருந்த எல்லாரும் தற்போது முன்னரைப் போலவும் இல்லை என தெரிவத்துள்ளார்.
ஏற்கனவே ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சுரேஸ் பிரேமச்சந்தன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் இணைந்து கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின் போது போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply