இலங்கை இராணுவத்தினர் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை: இந்திய பிரதமர் மன்மோகன் சிங்
இலங்கையின் வடக்கே மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.முதல்ர் கருணாநிதியை சந்திப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நேற்ன்று பிற்பகல் சென்னை வந்தார்.தனி விமானம் மூலம் சென்னை வந்த அவர் அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலம் துறைமுக ஹெலிபேடுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தாஜ் கன்னிமாரா ஹோட்டலுக்கு புறப்பட்டார்.பலத்த பாதுகாப்புடன் ஹோட்டலுக்கு வந்த அவர் அங்கு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.அப்போது பிரதமர் கூறுகையில்,
“இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்து வரும் ராணுவத் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருவது ஆழ்ந்த கவலையை அளிக்கிறது. இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுமையும் இந்த உயிரிழப்பு குறித்து கவலை கொண்டுள்ளது.
போர் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களை மீட்டு அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதே இந்திய அரசின் முக்கிய நோக்கமாகும்.மேலும் இந்த சண்டை விரைவில் முடிவுக்கு வர வேண்டும். கடந்த காலம் முதல் இப்போது வரை, இந்தியாவின் நிலை என்னவென்றால், இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அமைதியான, கெளரவமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான். இலங்கையில் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்தது. அதன்படி அங்கு கனரக ஆயுதங்களை தற்போது பயன்படுத்தவில்லை. இலங்கைப் பிரச்சினைக்கு, ஒருங்கிணைந்த இலங்கை என்ற அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும். தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க காங்கிரஸ் கட்சி தன்னால் முடிந்ததை செய்யும்.
இலங்கையில் உள்ள அப்பாவித் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ இந்தியா உதவி செய்யும். இலங்கைத் தமிழர்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா அக்கறையுடன் உள்ளது. இலங்கையில் வசிக்கும் சிறுபான்மை தமிழர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். அதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.” எனத்தெரிவித்தார்.
மேலும் “இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரை இது சாத்தியம், இது சாத்தியமில்லை என்று ஊகமாகத்தான் கூற முடியும். நாம் ஒரு இறையாண்மை மிக்க நாட்டுடன் இப்பிரச்சினை குறித்து தொடர்பு கொண்டிருக்கிறோம். எனவே இறையாண்மை மிக்க ஒரு நாட்டுக்கு ராணுவத்தை அனுப்பி நாம் எதையாவது சாதிக்க முடியும் என்று நினைத்தால் அது கடினம், எளிதான ஒன்றல்ல.
சர்வதேச சட்டம் என்று ஒன்று உள்ளது. எனவே இலங்கைப் பிரச்சினை தொடர்பாக சில வாக்குறுதிகளை அளித்துக் கொண்டிருக்கும் சில அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.
இலங்கைத் தமிழர் துயரம் குறித்து காங்கிரஸ் கவலை கொள்ளாமல் உள்ளதாக கூறுவது தவறு.கடந்த ஐந்து ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு இனப்பிரச்சினை குறித்த கவலையுடன்தான் உள்ளது. ” என அச்செய்தியாளர் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை..
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதுதொடர்பாக இலங்கை அதிபருடனும், பிரதமருடனும் நான் பேசிக் கொண்டுதான் இருந்தேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தப் பிரச்சினையை நான் எழுப்பியபடிதான் இருந்தன். தமிழ் மக்களுக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. அவர்களது குறைகளுக்கு காரணம் உள்ளது.
விடுதலைப் புலிகள் விஷயத்தில், அரசைப் பொறுத்தவரை அது ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பாகும். தீவிரவாத அமைப்பாகும். இதுதான் இந்திய அரசின் கொள்கையாகும் என்றார் மன்மோகன் சிங் .
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை சென்னை வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று சென்னை வந்தார். ஆனால் அவர் பிரசாரக் கூட்டம் எதிலும் பங்கேற்கவில்லை.
கருணாநிதியை சந்தித்தார்…
செய்தியாளர்கள் கூட்டத்தை முடித்துக் கொண்டு முதல்வர் கருணாநிதியை சந்திக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு காரில் புறப்பட்டுச் சென்றார் பிரதமர்.
அங்கு முதுகு வலி, காய்ச்சல், தொண்டை வலி காரணமாக சிகிச்சை மேற்கொண்டிருக்கும் முதல்வர் கருணாநிதியை அவர் சந்தித்தார்.முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர், அவர் விரைவில் குணமடைய விரும்புவதாக தெரிவித்தார்.
பிரதமரிடம் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்தும், போர் நிறுத்தம் குறித்தும், தமிழர்களுக்கான நிவாரணப் பணிகள் குறித்தும் முதல்வர் கருணாநிதி கோரிக்கை வைத்ததாகத் தெரிகிறது.
பிரதமர் வருகையையொட்டி அவர் செல்லும் இடங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கிட்டத்தட்ட 3000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விமான நிலையம் , ஹெலிகாப்டரில் அவர் வந்து இறங்கும் துறைமுகத்தில் உள்ள கப்பல் படை தளம், கன்னிமாரா ஹோட்டல், அப்பல்லோ மருத்துவமனை ஆகிய இடங்கள் பலத்த பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டன.
ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். பிரதமர் கடற்படை தளத்தில் இருந்து கன்னிமாரா ஹோட்டலுக்கு செல்லும் வழி நெடுகிலும், கன்னிமாராவிலிருந்து அப்பல்லோ மருத்துவமனை செல்லும் வழியிலும் போலீசார் அரண்போல பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
பிரதமர் செல்லும் போது வழியில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டது. வழியில் இருக்கும் ரோடுகளில் குப்பைத் தொட்டிகள்கூட அகற்றப்பட்டன.
முதல்வர் தவிர அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் ஆளுநர் பர்னாலா, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் ஆகியோரையும் பிரதமர் சந்தித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply