எஞ்சியுள்ள சிவிலியன்களை மீட்கும் இறுதி நடவடிக்கை நேற்று ஆரம்பம்

முல்லைத்தீவில் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள சிவிலியன்களையும் மீட்கும் இறுதிக்கட்ட நடவடிக்கைகளை இராணுவத்தினரும், கடற் படையினரும் இணைந்து நேற்று ஆரம்பித்தனர்.இதன் விளைவாக நேற்றுக் காலை முதல் மாலை வரையான காலப்பகுதிக்குள் 1000 சிவிலியன்கள் கட்டம் கட்டமாக படையினரை நோக்கி வருகை தந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். சிவிலியன்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு கரியமுள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளால் இறுதியாக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அரணை படையினர் கடந்த சனிக்கிழமை மாலை தகர்ந்து அழித்தனர். இதனையடுத்தே பெருந்திரளான மக்கள் கட்டம் கட்டமாக படையினரை நோக்கி வந்து சேர்ந்ததாகவும் பிரிகேடியர் கூறினார்.

கரியமுள்ளிவாய்க்காலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரையில் படையினருக்கும் புலிகளுக்குமிடையே கடும் சமர் மூண்டுள்ளது. இதன் போது புலிகள் தரப்புக்கு பாரிய சேதம் ஏற்பட்டதுடன் பெரும் எண்ணிக்கையான புலிகள் கொல்லப்பட்டதாகவும் பேச்சாளர் நாணயக்கார தெரிவித்தார். சனிக்கிழமை மாலையளவில் புலிகளின் இறுதி மணல்மேடு அழிக்கப்பட்டதும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மக்கள் படையினரை நோக்கி வந்து சேர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது கரியமுள்ளிவாய்க்காலிலிருந்த நேற்று 685 சிவிலியன்கள் 53 ஆம் படையணியினரிடம் வந்து சேர்ந்துள்ளனர். முல்லைத்தீவிலிருந்து 15 சிவிலியன்கள் 59 ஆம் படையணியினரிடம் தஞ்சமடைந்துள்ள அதேவேளை, கடற்படையின் படகுகள் மூலம் 300 சிவிலியன்களை மீட்டிருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

இராணுவத்தின் 53ஆம் மற்றும் 59ஆம் படையணியினரிடம் தஞ்சமடைந்துள்ள மேற்படி 700 சிவிலியன்களும் புலிகளிடமிருந்து தப்பிவரும் வேளை, புலிகள் அவர்கள் மீது சரமாறியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். தப்பி வந்தவர்களுள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நால்வரது நிலை கவலைக்கிடமானதையடுத்து அந்நால்வரும் விமானம் மூலம் உடனடியாக அனுராதபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் இராணுவ பேச்சாளர் நாணயக்கார குறிப்பிட்டார். இராணுவத்தினரால் கடந்த வெள்ளிக்கிழமை (08) முதல் பாதுகாப்பு வலயத்தின் எல்லைகள் மீள வரையறுக்கப்பட்டுள்ளன. இப்புதிய பாதுகாப்பு வலயத்துக்குள்ளிலிருந்து புலிகள் துப்பாக்கித் தாக்குதல்கள் நடத்தியமை இராணுவத்தினரின் ராடரில் பதிவாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புலிகள் இப்புதிய பாதுகாப்பு வலயத்துக்குள்ளிலிருந்து, சிவிலியன்களின் வருகையைத் தடுக்கும் பொருட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் காலை 10.19 மணிவரையிலும் கடும் துப்பாக்கிச் சமரை நடத்தியிருப்பது ராடரில் பதிவாகியுள்ளது. புலிகள் இவ்வாறான தாக்குதல்களை நடத்திவிட்டு படையினர் மீது குற்றம் சுமத்த முயற்சிப்பதாகவும் ஊடக மத்திய நிலையம் கூறியது. புலிகளின் தொலைத் தொடர்பு சம்பாஷணைகளை இடைமறிந்து செவிமடுத்த போது அவர்களுடைய கண்மூடித்தனமான தாக்குதல்களால் நேற்றுக் காலை மாத்திரம் பெரும் எண்ணிக்கையிலான சிவிலியன்கள் உயிரிழந்த தகவல் ஊர்ஜிதம் செய்யப்பட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

இராணுவத்தின் 58ஆம் படையணியினர் தற்போது புதிய பாதுகாப்பு வலயத்திலிருந்து 250 மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருப்பதாகவும் நிலையம் சுட்டிக்காட்டியது.

மேலும் நேற்று இராணுவத்தினராலும் கடற்படையினராலும் மீட்கப்பட்ட ஆயிரம் சிவிலியன்களும் பாதுகாப்பாக நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவரெனவும் பிரிகேடியர் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே 9ம்திகதிக்குட்பட்ட காலப் பகுதியில் ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 493 பேர் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கான தங்குமிடம் மற்றும் அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் அரசாங்கம் ஆவலுடன் முன்னெடுத்து வருகிறது. தொடர்ந்தும் புலிகளிடமிருந்து வரும் சிவிலியன்களுக்கு இவ்வசதிகள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply