ரபேல் போர் விமானங்களை குறைந்த விலைக்கு வாங்குகிறோம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம்

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லியில் உள்ள ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில், அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், 126 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்குவதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் 2012-ம் ஆண்டு பேச்சுவார்த்தை தொடங்கியது. பறக்கும் நிலையில் 18 விமானங்களை டசால்ட் ஏவியேசன் நிறுவனம் சப்ளை செய்ய வேண்டும் என்பதும், மீதி விமானங்களை இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்துடன் (எச்.ஏ.எல்.) இணைந்து டசால்ட் நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்பதும் திட்டம் ஆகும்.

இதுபற்றி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் டசால்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் போதிய திறனை பெற்று இருக்கவில்லை என்று உணர்ந்தது. மேலும், இந்தியாவில் தயாரித்தால், ஒப்புக்கொண்டதை விட செலவு அதிகரிக்கும் என்றும் கருதியது.

இந்தியாவில் தயாரிக்க வேண்டுமானால், அதன் தரம் குறித்து உத்தரவாதம் வழங்க வேண்டும். ஆனால், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் உத்தரவாதம் வழங்க முன்வரவில்லை. இதனால், டசால்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடரவில்லை.

அத்துடன், 2013-ம் ஆண்டு, செலவு குறித்த பேச்சுவார்த்தை குழு, இந்த பேரத்துக்கு இறுதி வடிவம் கொடுத்தபோது, அப்போதைய ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணியின் எப்போதும் இல்லாத தலையீட்டால், ஒப்பந்தம் கையெழுத்து ஆகாமலே போய்விட்டது. அவர் நினைத்திருந்தால், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு அரசு நிதியை அளித்து, அதை பலப்படுத்தி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை.

ஆனால், நாங்கள் 2016-ம் ஆண்டு, 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடி செலவில் கொள்முதல் செய்ய பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம். இதில்தான், ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கூறுகிறது.

தலா ரூ.526 கோடிக்கு காங்கிரஸ் வாங்க நினைத்த போர் விமானங்கள், வெறுமனே பறப்பதற்கும், தரை இறங்குவதற்கும் மட்டுமே உரியவை. ஆனால், நாங்கள் வாங்குவது, போர் தளவாடங்கள், இதர தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்ட முழுமையான போர் விமானங்கள். இவை அதைவிட உயர் தரத்துடன் இருக்கும்.

காங்கிரஸ் ஆட்சியில் வாங்க நினைத்த விலையை விட 9 சதவீதம் விலை குறைவாகவே இவற்றை வாங்குகிறோம். இந்த விமானங்கள், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நம்மிடம் ஒப்படைக்கப்படும்.

இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடக்கவில்லை. இப்பிரச்சினைக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் ஊழல்வாதி அல்ல என்று அவர்களுக்கு தெரியும்.

இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகளின் கவலைகளை போக்க அவர்களை அழைத்துப்பேச போவதில்லை. ஏனென்றால், அவர்கள் எந்த ஆதாரமும் இல்லாமல், குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார்கள். விமானப்படை குறித்தும் அவர்களுக்கு அக்கறை இல்லை.

சொல்வதற்கு பிரச்சினை எதுவும் இல்லாததால், இதைப்பற்றி பேசி வருகிறார்கள். ராணுவ அமைச்சகத்தில் இடைத்தரகர்கள் இல்லாமல், தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்தியாவின் தூய்மையான அரசுகளில் இதுவும் ஒன்று.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply